வந்த வேகத்தில் தனது படத்தை அகற்றி வீசிய அண்ணாமலை.. மகளிர் தின விழா மேடையில் பரபரப்பு..!

கோவை : கோவையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மைக் முன்பு இருந்த தனது படத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயர்த்து அகற்றிவிட்டு மேடையில் ஏறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவையில் பாஜக சார்பில் மகளிர் தின விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழா மேடையில் ஏறிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, போடியத்தில் இருந்த தனது புகைப்படத்தைப் பெயர்த்து எடுத்தார்.

பெண்களுக்கான நிகழ்ச்சியில் எனது புகைப்படம் வேண்டாம் என்பதற்காக அதனை அகற்றினேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. கோவை விமான நிலையம் அருகே உள்ள சித்ரா ஆடிட்டோரியத்தில் நேற்று மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் “பெண்மையைப் போற்றுவோம், மாதர்களின் ஒற்றுமை மலரட்டும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கு முன்னதாக மேடைக்கு வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அங்கு மேடையில் இருந்த மைக் பெட்டியின் முகப்பில் ‘பெண்மையைப் போற்றுவோம்’ எனக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டிருந்த தனது புகைப்பட போஸ்டரை பெயர்த்து, கீழே நின்ற காவலர்களிடம் கொடுத்துவிட்டு, அதன் பின்னர் மேடையில் தனது இருக்கையில் சென்று அமர்ந்து மற்ற சிறப்பு விருந்தினர்களையும் பேசுவதற்கு அழைத்தார்.

அண்ணாமலையின் இந்தச் செயலால் அங்கு கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தன்னுடையே பட போஸ்டரை தானே அகற்றியது பற்றி விளக்கம் அளித்த அண்ணாமலை, “பெண்களைக் கொண்டாடும் இந்த நிகழ்ச்சியில் எனது படம் வேண்டாம் என்பதற்காகவே வந்ததுமே எனது புகைப்படத்தை தூக்கி எறிந்தேன்” எனத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, “பெண்கள் சிங்கங்களாக ஆண்களின் சாதனைகளை உடைத்து மேலே வருகிறார்கள். மகளிருக்கு மிகப்பெரிய சாதனை என்பது தாயாக இருப்பது தான். பிரதமர் தனது தாய்க்கு எழுதிய ட்விட்டர் பதிவை அனைவரும் கட்டாயமாக பார்க்க வேண்டும். பெண்கள் ராணுவத்துக்கு வந்துவிட்டார்கள். பெண்கள் நுழையாத இடமே இல்லாத அளவிற்கு அனைத்திலும் வந்து விட்டார்கள்.

எம்.பி, எம்.எல்.ஏ என பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வதற்காக அண்ணாமலை அரசியலுக்கு வரவில்லை. கட்சி வளர வேண்டும் என்பது தான் எனது இலக்கு. இன்னொரு கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி பாஜக வளரவில்லை. பாஜக தனக்குரிய இடத்தை கண்டுபிடித்து தனித்தன்மையோடு செயல்பட்டு வருகிறது. பாஜகவின் பாதையை கூட்டணிக் கட்சிகளுடன் ஒப்பிட்டுப் பேச வேண்டாம். நான் சொன்ன கருத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை. அதே நிலைப்பாட்டில் தான் உள்ளேன்.

ஜெயலலிதாவுடன் என்னை ஒப்பிட்டு நான் கூறவில்லை. அரசியல் கட்சியில் சில இடங்களில் மேனேஜரும் சில இடங்களில் தலைவரும் உள்ளனர். ஜெயலலிதா கூட டெபாசிட் போய் மீண்டும் களத்தில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார். நானும் ஜெயலலிதாவின் பாதையில் தான் சென்று கொண்டு வருகிறேன். கடினமான பாதையை நான் தேர்ந்தெடுத்து வருகிறேன். என் தாய் என் மனைவி ஆகியோர் ஜெயலலிதாவை விட பலம் கொண்டவர்கள்.” எனத் தெரிவித்தார்.