இப்ப நீங்க தானே ஆட்சியில் இருக்கீங்க… டாஸ்மாக் கடையை ஏன் மூடல..? – உதயநிதியிடம் வாக்குவாதம் செய்த பெண்கள்.!!

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தக்கலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

நாகர்கோவிலில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நம்மை எதிர்த்தவர்கள் கடந்த முறை ஒரே அணியில் இருந்தனர். இந்த முறை அவர்கள் இரண்டு அணிகளாக நிற்கிறார்கள். எனவே 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வசந்தை வெற்றிபெறவைக்க வேண்டும். இதே உற்சாகத்தோடு நீங்கள் வேலை செய்தால் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வசந்த் வெற்றி பெறுவார். 2021 தேர்தலில் நாகர்கோவிலில் கழக வேட்பாளரை தோல்வியுற செய்தீர்கள். ஏமாந்தது நீங்கள்தான். தி.மு.க-வுக்கு வாக்களித்தவர்களுக்கு உண்மையாக உழைப்பேன் என்றார் ஸ்டாலின். வாக்களிக்காதவர்கள் ஏன் நாம் வாக்களிக்கவில்லையே என வருத்தப்படும் அளவுக்கு பணி செய்வோம் என ஸ்டாலின் சொன்னார். அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்.

சசிகலாவின் காலை பிடித்து முதல்வர் ஆகிவிட்டு, அவரை சிறையில் அனுப்பிவிட்டு யார் அந்த சசிகலா என்று கேட்டவர் தான் பழனிசாமி. பழனிசாமி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் துரோகம் செய்துள்ளார். பா.ஜ.க கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தையும் ஆதரித்து மாநில உரிமைகள் அத்தனையும் அடகு வைத்து விட்டார். மொழி உரிமை, நிதி உரிமை என அனைத்தையும் அடகு வைத்து விட்டார். அவற்றை எல்லாம் மீட்க இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தாக வேண்டும்.

மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், மகளிர் விடியல் பேருந்து என இந்த அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது” என உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது… `டாஸ்மாக் கடையை ஏன் மூடவில்லை?’ என பெண்கள் சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய உதயநிதி, “கடந்த மூன்று ஆண்டுகளில் நாங்கள் 500 கடைகளை மூடியிருக்கிறோமே” என்றார். அதற்கு, `அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடுங்கள்’ என பெண்கள் கூறினர். உடனே, “2016-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடையை மூடுவோம் என்று சொன்னோம். ஆனால் நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள்?” என பதில் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘நாங்கள் தி.மு.க-வுக்குத்தான் ஓட்டு போட்டோம். இப்போது நீங்கள்தானே ஆட்சியில் இருக்கிறீர்கள், டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்’ என பெண்கள் பதில் சொன்னார்கள். உடனே சுதாரித்துக்கொண்ட உதயநிதி, “கடந்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன” எனச் சொல்லி சமாளித்துவிட்டு, மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.