கோவையில் சூரிய ஒளி மின்சாரத்தை சேமித்து வைத்து பயன்படுத்த மானியம் வழங்க வேண்டும்- தமிழக அரசுக்கு கோரிக்கை..!

கோவை: அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் சூரியஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.தமிழகத்தில் சூரியஒளி மின் உற்பத்தித் துறையில் 4,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் மழை நேரங்களிலும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி தொடர்வதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவையில் வசிக்கும் தமிழ்நாடு சூரியஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-
ஒரு மெகாவாட் சூரியஒளி மின் உற்பத்தி கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 4.25 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஒரு மெகாவாட் மின்உற்பத்திக்கு 300 வாட் திறன் கொண்ட 3,500 தகடுகள் நிறுவப்பட வேண்டும். தற்போது பகலில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து வைத்து, இரவில் பயன்படுத்த கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த பெரும்பாலான தொழில் நிறுவனங்களிடம் நிதிவசதி இல்லை. தமிழக அரசு மானியம் வழங்கினால் எதிர்வரும் நாட்களில், மின்சேமிப்பு கட்டமைப்பு மூலம் இரவிலும் சூரியஒளி மின்உற்பத்தியை தொடர்ந்து பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும். தவிர, கடந்த 3 ஆண்டுகளாக மின் கொள்முதல் ஒப்பந்தத்தை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதை செயல்படுத்தினால் மீண்டும்
தமிழகத்தில் மேலும் 4,500 மெகாவாட் புதிதாக மின் உற்பத்தி செய்யலாம் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்..