நேருவின் குடும்ப சொத்து அல்ல.. பிரதமர் பதவி- ராகுலுக்கு பா.ஜ.க வானதி பதிலடி.!!

கோவை: ”பிரதமர் பதவி என்பது, நேரு குடும்பத்தின் சொத்து என, நினைத்து கொண்டு பேசி வருகிறார் ராகுல்,” என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். வானதி வெளியிட்டுள்ள அறிக்கை:முதல்வர் ஸ்டாலின் எழுதிய நுாலை வெளியிட்டுபேசிய, காங்., எம்.பி., ராகுல், நுாலைப் பற்றி பேசியதை விட, பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி தான் அதிகமாக பேசியிருக்கிறார். பிரதமர் இல்லத்திலேயே பிறந்து, செல்வச் செழிப்பில் வளர்ந்த ராகுல், பிரதமர் பதவி என்பது, நேரு குடும்பத்தின் சொத்து என நினைத்து கொண்டு இருக்கிறார்.குஜராத்தில் ஒரு குக்கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மோடி, பிரதமர் ஆனதை ராகுலால் ஏற்க முடியவில்லை. பிரதமர் மோடி தேநீர் விற்று வாழ்வை தொடங்கியவர். மக்களோடு, மக்களாக, வாழ்ந்த பிரதமர் மோடியை, ‘தமிழக மக்களை புரிந்து கொள்ளாமல் பேசுகிறார் மோடி’ என, ராகுல்குற்றம் சாட்டி பேசியிருக்கிறார்.

ராகுலால் தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையே புரிந்து கொள்ள முடியாது. தமிழின் தொன்மையையும், தமிழின் சிறப்பையும், பிரதமர் மோடி பேசியது அதிகம். மாதந்தோறும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் கூட, தமிழர்களின் சாதனைகளை தான் அதிகமாக பேசியிருக்கிறார். இது தமிழக மக்களுக்கு தெரியும்.தமிழகம் வந்தால் ராகுல் தி.மு.க.,வோடு சேர்ந்து கொண்டு, ‘இந்தியா நாடல்ல, மாநிலங்களின் ஒன்றியம்’ என பிரிவினைவாதம் பேசுகிறார். இவர் என்ன பேசினாலும் ஒன்றும் நடக்காது. தமிழக மக்கள், 1967-ம் ஆண்டிலேயே, காங்கிரசுக்கு முடிவுரை எழுதி விட்டனர்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.