வடகிழக்கு பருவமழை.. இன்னும் சில நாட்களில் வெளுத்து வாங்க போகுதுதாம் .. வானிலை மையம் தகவல்..!

சென்னை: தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

28ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

29 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி, திண்டுக்கல், இராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

30ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

29.10.2022, 30.10.2022: தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடாபகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.