44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: கோவையில் செஸ் விளையாடிய மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், வருவாய் அலுவலர்.
வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை, மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
போட்டிக்கான சின்னம் வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் அந்த சின்னமானது சுவரொட்டிகள் மூலமாகவும் பேனர்கள் மூலமாகவும் வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், செஸ் போட்டிகள் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு, செஸ் போட்டிகளில் மாணவ மாணவிகளுக்கு ஈர்ப்பு ஏற்படும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோர் சதுரங்கம் விளையாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.