பூக்களம் முதல் கொண்டாட்டம் வரை… கோவையில் ஓணம்!

கேரளாவின் பாரம்பரிய மற்றும் முதன்மைப் பண்டிகையான ஓணம் திருநாள் இன்று நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,

கோவை சித்தாபுதூர் அருள்மிகு ஐயப்பன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தமிழக – கேரளா எல்லையான கோவையில் ஏராளமான மலையாள மொழியைப் பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். ஓணம் திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே வீடுகளின் முன்பு வண்ணமயமான அத்தப்பூக் கோலமிட்ட மக்கள், புத்தாடை அணிந்து குடும்பத்துடன் சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலுக்கு வருகை தந்தனர்.

​கோயிலில் ஓணம் பண்டிகையை ஒட்டி சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகங்களும் அலங்கார பூஜைகளும் நடைபெற்றன. அலங்கார தோரணங்களால் மிளிர்ந்த கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சாமி தரிசனம் செய்த பெண் பக்தர் ஒருவர் கூறுகையில்,

“ஓணம் பண்டிகை நாளில் காலையிலேயே பூக்கோலமிட்டு ஐயப்பன் கோயிலுக்கு வந்து விடுவோம். இங்கு உள்ள மக்களைக் காணும் போது அளவற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. பிற்பகலில் அனைத்து வகையான இனிப்புகள், கார வகைகள் மற்றும் காய்கறி பொரியல்களுடன் ‘ஓண சத்யா’ விருந்து தயார் செய்து, உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் பகிர்ந்து உண்போம். தொடர்ந்து முன்னோர்களின் வீடுகளுக்குச் சென்று வாழ்த்துப் பெறுவோம்” என்றார்.

கேரளாவில் இருந்து கோவைக்கு முதன் முறையாக வந்து உள்ள குடும்பத்தினர் கூறுகையில்,

“கேரளாவில் அனைவரும் மலையாள மக்கள் மட்டுமே கொண்டாடுவோம். ஆனால் கோவையில் தமிழர்களும் இணைந்து இந்த ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவதும், கோயிலில் இவ்வளவு திரளான பக்தர்கள் கூடியிருப்பதும் எங்களுக்கு மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இங்கு அளிக்கப்படும் ஆதரவு மிகவும் சிறப்பாக உள்ளது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

​கோயிலில் சாமி தரிசனம் செய்த பின், மாலையில் குடும்பத்துடன் ஒன்று கூடிப் பாட்டு பாடி, பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி ஓணம் பண்டிகையைக் கோவையில் உள்ள மலையாள மக்கள் வெகுசிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.