தமிழக காவல்துறைக்கு புதிய இ-சர்வீஸ் ஆப்… விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது..!

சென்னை: காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும் என்று அடிப்படையாக கொண்டு ‘தமிழ்நாடு போலீஸ் இ-சர்வீஸ்’ என்ற புதிய ஆப் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆப் மூலம் காவல்துறை உயர் அதிகாரிகள், மற்ற அதிகாரிகளுக்கு உத்தரவுகளை உடனுக்குடன் பிறப்பிக்க முடியும். இதன் மூலம் தமிழக காவல்துறையில் உடனுக்குடன் உத்தரவுகள் நிறைவேற்றப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிவப்பு நாடா முறை என்று அழைக்கப்படும் கோப்புகள் வாயிலாக உத்தரவுகள் பிறக்கப்பட்டு வருவதால், காவல் துறையில் பல அலுவலகங்களில் கோப்புகள் கட்டுக்கட்டாக தேங்கி விடுகிறது. இதனால், போலீஸ் அதிகாரிகளின் உத்தரவுகள் கீழ்மட்ட அதிகாரிகளுக்குச் சென்று சேர்வதில் தாமதம் உள்ளது. இதைத்தடுக்கும் வகையில் காவல்துறை முழுமையாக கணிணி மற்றும் ஆப் மயமாகி வருகிறது.

முதலில் இ-ஆபீஸ் என்ற மென்பொருள் மூலம் காவல் துறையில் நிர்வாக ரீதியான பெரும்பாலான வேலைகள் கம்ப்யூட்டர் மயமாகிவிட்டது. இதற்கென காவல்துறையில் தனி பிரிவும் உருள்ளது. அதேநேரம் தற்போதைய நிலையில், தமிழக காவல்துறையில், தபால் மூலம் உத்தரவுகள் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் நிர்வாக ரீதியான பணிகள் இ-ஆபீஸ் மென்பொருள் மூலமும் நடைபெற்று வருகிறது.

இதனிடையே உத்தரவுகளையும் உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில், தமிழகத்திலுள்ள போலீஸ் அதிகாரிகளுக்கென்று பிரத்யேகமான ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. இதுகுறித்து காவல்துறை தலைமையக அதிகாரிகள் கூறும் போது, ‘தமிழ்நாடு போலீஸ் இ-சர்வீஸ்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய ஆப் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளும் இந்த ஆப்பில் இணைக்கப்பட்டிருப்பார்கள்.

இந்த புதிய ஆப்பில், எஸ்பி அந்தஸ்து முதல் டிஜிபி வரை முதல்கட்டமாக 208 பேரின் பெயர், விவரம் அவர்களின் பிறந்த தேதி ஆகியவை இடம் பெற்றிருக்கும். மேலும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியாற்றிய இடம், பதவி உயர்வு பெற்ற ஆண்டு, தேதி உட்பட அனைத்து விவரங்களும் புகைப்படத்துடன் இடம் பெற்றிருக்கும். இந்த ஆப்பை பயன்படுத்துவதற்காக ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் பிரத்யேகமான பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆப் காரணமாக பேப்பர் நடைமுறை முடிவுக்கு வருகிறது. புதிய ஆப்பில் அதிகாரிகள் உள்நுழைந்து தங்களுக்குத் தேவையான தகவல்களை அறியலாம். மேலும் விடுப்பு கோருதல், தேவையான கோரிக்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் தகவல் பதிவேற்றம் செய்ய முடியும். சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் அந்த செயலியிலேயே பதில் அளிப்பார்கள். இதன்மூலம் பேப்பர் நடைமுறை முடிவுக்கு வரும். உடனுக்குடன் தகவல் பரிமாறப்படுவதாலும், அதன் மீது உடனுக்குடன் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாலும் சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதிலும், நிர்வாக ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்வதில் அதிகாரிகள் விரைந்து செயல்படுவார்கள்.

எப்படி என்றால், உதாரணமாக ஒரு போலீஸ் அதிகாரி விடுப்பு எடுக்கிறார் என்றால் அதுகுறித்து அந்த செயலியில் பதிவிட்டால் போதும். சம்பந்தப்பட்ட அதிகாரி விடுப்புக்கு ஒப்புதல் அளிப்பதோடு அந்த இடத்தில் தற்காலிகமாக பொறுப்பு அதிகாரி யார் என்று அவரது பெயரையும் குறிப்பிட்டுவிடுவார். இதை அனைத்து அதிகாரிகளும் தெரிந்துகொண்டு தேவைக்கு ஏற்ப தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். இதேபோல் பல்வேறு சிறப்பம்சங்கள் புதிய ஆபபில் உள்ளது. இந்த செயலி குறித்து அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் தெரிவித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் முதல் முழுமையாக தமிழ்நாடு போலீஸ் இ-சர்வீஸ் ஆப் நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் கூறினர்.