மாரியம்மன் ஒற்றைக் கண் திறந்ததாக சூலூரில் திடீர் பரபரப்பு- கோவிலில் குவிந்த பக்தர்கள்..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செலக்கரச்சலை அடுத்த திம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த 30 வருடங்களாக மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது.
இந்த கோவிலில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் கோவிலின் பூசாரி பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக வந்தார். பூசாரி மாரியம்மனுக்கு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு இருந்த சிறுமி மாரியம்மனின் வலது கண் திறந்திருப்பதாக பூசாரியிடம் தெரிவித்தார்.அதனைப் பார்த்த பூசாரி பக்தி பரவசத்துடன் அம்மனை அலங்கரித்து பூஜைகளை செய்தார்.
பின்னர் வீட்டிற்கு சென்ற அந்த சிறுமி நடந்துவற்றை தனது தந்தையிடம் கூறினார். அவர் அக்கம் பக்கத்தில் தெரிவித்தார். இதனை கேட்டு அனைவரும் கோவிலுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது மாரியம்மனின் வலது கண் திறந்து இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்து பரவசம் அடைந்தனர். பின்னர் பக்தர்கள் மாரியம்மன் கண் திறந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் காட்டு தீ போல சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து சுற்றுவட்டார கிராம மக்கள் மாரியம்மனை காண திரளாக வந்து மாரியம்மனை வழிபட்டு சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த 3 நாட்களாக மாரியம்மனின் கண் திறந்து இருகிறது, வலது கண்ணில் நீர் வடிந்து வந்தது. இது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது என்றனர்.