சாவர்க்கர் பற்றி நாடு தழுவிய பிரசாரம்: ராகுலுக்கு நெருக்கடி தர பாஜக புதிய திட்டம்..!

சென்னை: நாடெங்கும் சாவர்க்கரை பற்றி பிரசாரம் செய்வதன் வாயிலாக காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்க பா.ஜ.திட்டமிட்டுள்ளது.சுதந்திர போராட்ட தலைவர் வீர சாவர்க்கரை பா.ஜ. சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கொள்கை ஆசானாக கொண்டாடி வருகின்றன. அந்தமான் சிறையில் 14 ஆண்டுகள் சித்ரவதைகளை அனுபவித்த அவரை இழிவுபடுத்தும் வகையில் ‘மன்னிப்பு கேட்பதற்கு என் பெயர் சாவர்க்கர் அல்ல’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார். இது நாடு முழுதும் குறிப்பாக சாவர்க்கர் பிறந்த மகாராஷ்டிராவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ் கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் ராகுலுக்கு எதிரான தங்களது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
ராகுலின் எம்.பி. பதவி நீக்கத்தை தொடர்ந்து நடந்த கூட்டணி கட்சிகள் கூட்டத்தையும் சிவசேனா புறக்கணித்தது. ‘சாவர்க்கரை ராகுல் தொடர்ந்து அவமானப்படுத்தினால் கூட்டணியில் விரிசல் ஏற்படும்’ என உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அமைச்சர்கள் பா.ஜ. கூட்டணி எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் தங்களது ‘பேஸ்புக் டுவிட்டர்’ போன்ற சமூக ஊடக பக்கங்களில் சாவர்க்கர் படத்தை முகப்பு படமாக வைத்துள்ளனர். ஏற்கனவே சிலமுறை சாவர்க்கரை கேலி செய்து ராகுல் பேசியிருந்தாலும் இந்த முறை பேசியதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி காங்கிரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க பா.ஜ. திட்டமிட்டுள்ளது.பா.ஜ. தலைவர் ஒருவர் கூறியதாவது: பா.ஜ.வின் சாதாரண தொண்டருக்கு கூட சாவர்க்கரின் வீர வரலாறும் அந்தமான் சிறையில் அவர் அனுபவித்த கொடுமைகளும் தெரியும். அப்படிப்பட்டவரை ராகுல் தொடர்ந்து அவமதித்து வருகிறார். சாவர்க்கரின் தியாகம் குறித்து மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரசார இயக்கத்தை நடத்த பா.ஜ. தலைமை திட்டமிட்டுள்ளது.

இதை ஏற்கனவே மகாராஷ்டிரா பா.ஜ. துவங்கியுள்ளது.சமூக ஊடக பக்கங்களில் சாவர்க்கர் படத்தை முகப்பு படமாக வைப்பது அவர் பற்றிய கருத்தரங்குகள் கூட்டங்கள் நடத்துதல் சாவர்க்கர் எழுதிய நுால்களையும் அவரை பற்றி எழுதப்பட்ட நுால்களையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு சாவர்க்கர் பற்றி பேச்சு கட்டுரை கவிதை குறும்பட போட்டிகள் நடத்துவது சாவர்க்கர் எழுதிய புத்தகங்கள் குறித்து விமர்சன கூட்டங்கள் நடத்துவது என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் பா.ஜ. திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.