இந்தியாவை மீண்டும் வேகமெடுத்த கொரோனா… 24 மணி நேரத்தில் 3,016 பேருக்கு தொற்று உறுதி..!

2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்..

லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனாவில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பேரழிவை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000,2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 3000-ஐ கடந்துள்ளது.. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 3,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் 40% க்கும் மேல் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 6 மாதங்களில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை ஆகும்.

கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி மொத்தம் 3,375 கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டது. தற்போது கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,509 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக மேலும் 14 பேர் உயிரிழந்ததால், இந்தியாவின் கோவிட் பலி எண்ணிக்கை 5,30,862 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, டெல்லியில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் புதிதாக 300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.. இதையடுத்து டெல்லி சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜ் இன்று அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.