ஈஷாவுக்கு பயிற்சிக்கு சென்று மாயமான திருப்பூர் இளம்பெண்: கிணற்றில் பிணமாக மீட்பு- கொலையா? போலீஸ் விசாரணை..!

கோவை : திருப்பூரை சேர்ந்தவர் பழனி குமார். பனியன் தொழிலாளி. இவரது மனைவி சுபஸ்ரீ ( வயது 34) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுபஸ்ரீ கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 7 நாட்கள் பயிற்சி பெற செல்வதாக கணவர் பழனி குமாரிடம் கூறிவிட்டு கடந்த மாத 11ஆம் தேதி கோவைக்கு வந்தார். அங்கு பயிற்சி முடிந்து 18-ந்தேதி சுபஸ்ரீ வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் பழனிகுமார் தனது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். முடியவில்லை அதனால் கோவை ஆலந்துறை காவல் நிலையத்தில் கடந்த மாதம் 19-ந் தேதி புகார் செய்தார். அதில் ஈஷாவுக்கு யோகா பயிற்சிக்கு வந்த தனது மனைவி சுபஸ்ரீ மாயமாகிவிட்டார். அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். கேமராக்களில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த வழியாக வந்த காரில் ஏறி சென்றதும் அதிலிருந்து இறங்கி ஓடுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது .மாயமான சுபஸ்ரீ கண்டுபிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது .அவர்கள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் செம்மேட்டை அடுத்த காந்தி காலனியில் உள்ள விவசாய கிணற்றில் வெள்ளை நிற உடை அணிந்த ஒரு பெண் பிணமாக மிதந்ததது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. தீயணைப்பு படைவீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி அந்தப் பெண்ணின் உடலை மீட்டனர். உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது
பிணமாக கிடந்தவர் மாயமான சுபஸ்ரீயாக இருக்கலாமா ? என்பதை கண்டறிய போலீசார் பழனி குமாருக்கு தகவல் கொடுத்தனர் .அவர் கோவை வந்து கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் உடலை பார்த்து அவர் தனது மனைவி சுபஸ்ரீ தான் என்று உறுதி செய்தார். இதையடுத்து சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டரா? அல்லது யாராவது அவரை கொலை செய்து உடலை  கிணற்றில் வீசி விட்டு சென்றார்களா? என்பது உட்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.ஈஷாவுக்கு பயிற்சிக்கு சென்ற பெண் கிணற்றில் பிணமாக கிடந்தது கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.சுபஸ்ரீயின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடலில் எந்தவித காயங்களும் இல்லை என்று அறிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறவினரிடம ஒப்படைக்கப்பட்டு நஞ்சுண்டாபுரம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.