திருப்பூர் ஹோட்டல் அதிபரிடம் புதையல் தங்கம் என கூறி போலி தங்கம் கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி..!!

கோவையில் திருப்பூரை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரிடம் புதையல் தங்கம் என போலியான தங்கம் கொடுத்து 5 இலட்ச ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் மண்ணாரி பகுதியில் உள்ள பசும்பொன் தேவர் வீதியை சேர்ந்தவர் பாலு. 45 வயதான இவர், மண்ணாரி பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 15 ம் தேதி அவரது ஹோட்டலுக்கு சாப்பிட வந்த ஒருவர், இவருடன் பேசி அறிமுகமாகி உள்ளார். அப்போது அவர் கோவையில் மேம்பால பணிகள் செய்து வருவதாகவும், அப்பணிகளுக்காக ஒரு இடத்தில் குழி தோண்டிய போது ஒரு பானை நிறைய தங்கம் கிடைத்தகாவும் கூறியுள்ளார். மேலும் ஒரு தங்கக்கட்டியை எடுத்து காட்டி, அந்தப் பானையில் இருந்து கிடைத்த தங்கம் எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய பாலு, தங்கத்தின் விலை குறித்து எனக் கேட்டுள்ளார்.
இதையடுத்து அந்த நபர் கோவை காந்திபுரம் பகுதியில் தங்கம் இருப்பதாகவும், தங்கம் வாங்க வேண்டும் என்றால் அப்பகுதிக்கு பணத்துடன் வருமாறும் கூறியுள்ளார். இதன் பேரில் கடந்த 20 ம் தேதி பாலு தனது மனைவியுடன் திருப்பூரில் இருந்து கோவைக்கு காரில் வந்துள்ளார். காந்திபுரம் பகுதியில் உள்ள டாக்டர் நஞ்சப்பா சாலைக்கு வந்ததும், பாலு செல்போனில் அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டு அப்பகுதிக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் அந்த நபர் அப்பகுதியில் நின்று கொண்டிருப்பதை பார்த்துள்ளார். பின்னர் பாலு அந்த நபரிடம் 5 இலட்ச ரூபாய் பணத்தை கொடுத்து, தங்கத்தை பெற்றுக் கொண்டு திருப்பூருக்கு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 28 ம் தேதியன்று பாலு அந்த நபர் கொடுத்த தங்கக்கட்டிகளை சோதனை செய்து பார்த்துள்ளார். அப்போது போலியான தங்கத்தை கொடுத்து இருப்பதும், தன்னை அந்த நபர் ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலியான தங்கத்தை கொடுத்து 5 இலட்ச ரூபாய் பணம் ஏமாற்றி இருப்பதாக, பாலு கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காட்டூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.