வாகன ஓட்டிகளே உஷார்… கோவை சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய ரேடார் கேமராக்கள்”… போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல்.!!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதிவேகமாக செல்லும் வாகனங்கள் பதிவு செய்து அபராதம் விதிக்க சக்தி ரோடு, அவினாசி ரோடு, பாலக்காடு ரோடு ஆகிய 3 இடங்களில் ரூ.40 லட்சம் செலவில் ரேடார் கேமராக்கள் பொருத்தப்படுகிறது. பகல் மட்டுமின்றி இரவிலும் துல்லியமாக படம் பிடிக்கும் இந்த கேமரா விரைவில் செயல்பாட்டுக்கு வரும். இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கோவையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்தில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த ” போலீஸ் பிரதர்ஸ்” திட்டம் இன்னும் ஒரு சில நாட்களில் கோவையில் உள்ள 83 கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது .இதற்காக ஒவ்வொரு போலீஸ் நிலையத்தில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படுவார்.அவர் கல்லூரிகளில் மாணவர்களை சந்தித்து போதை பொருள் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார். போதை பொருள் நடமாட்டம் சப்ளை செய்பவர்களை கைது செய்தல் போதை கடத்தல் ஆசாமிகள் தொடர்பான விவரங்களை சேகரித்தல் ஆகியவை இந்த திட்டத்தில் இடம் பெறும். சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் பதிவு செய்து அபராதம் விதித்த ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்துமாறு போன் செய்தால் பலரும் அபராதம் செலுத்தாமல் உள்ளன .இதை தடுக்க வீடு தேடி அபராதம் வசூல் செய்வதற்காக ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் தல 2ஊர்க்காவல் படைவீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர் . கோவையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வெளி மாநிலங்களில் பதுங்கி இருந்த ரவுடிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். இன்னும் 3 ரவுடிகள் மட்டும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கோவை நகரில் குற்ற செயல்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது இவ்வாறு அவர் கூறினார்.