கோவை சிறுமியை கள்ளக்காதலுடன் சேர்ந்து கடத்திய தாய்: போலீசார் மீட்டு தந்தையிடம் ஒப்படைப்பு..!

கோவை:
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தேங்காய் பறிக்கும் கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரிந்து சென்று வேறு ஒருவருடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். மகள் தொழிலாளியின் பராமரிப்பில் உள்ளார். அந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி பள்ளி முடிந்து ஆட்டோவில் ஏறுவதற்கு வந்தார். அப்போது அங்கு ஒரு பெண்ணும், வாலிபர் ஒருவரும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் ஆட்டோ டிரைவரை திசை திருப்பி 2 பேரும் கண் இமைக்கும் நேரத்தில் அந்த சிறுமியை தூக்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அந்த மோட்டார் சைக்கிளை துரத்தி சென்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதற்கிடையில் பள்ளி முன்பு சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதனால் அங்கு கூட்டம் கூடிய போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மகாலிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் பொதுமக்கள் தெரிவித்த அடையாளங்கள், மற்றும் கண்காணிப்பு காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை அவரது தாய் கள்ளக்காதலுடன் சேர்ந்து கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை கடத்திச் சென்ற தாயை பிடித்து விசாரணை நடத்தி அவரிடமிருந்து சிறுமியை மீட்டனர். அப்போது சிறுமி தனது தந்தையுடன் செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சிறுமியை அவரது தந்தையுடன் அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியின் தாயாரை கண்டித்து, அறிவுரை வழங்கினர்.