கோவை ரெயிலில் பட்டாசுகளை எடுத்துச் செல்வதை தடுக்க போலீசார் சோதனை..!

கோவை ரெயில் நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களுக்கு தினமும் 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கோவை ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். தீபாவளிப் பண்டிகை நெருங்குவதையொட்டி ரெயில்களில் பட்டாசுகள், வெடிகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ்கள் போன்றவற்றை பயணிகள் கொண்டு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு 4 நாட்கள் மட்டுமே உள்ளது. இதையடுத்து, தற்போதில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் புறப்பட்டுச் சென்று வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, ரெயில்களில் பட்டாசுகள், கிப்ட் பாக்ஸ்கள் கொண்டு செல்வதை தடுக்க ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து சோதனைப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ரெயில்வே போலீசார் சார்பில் ஒரு சப் – இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 போலீசாரும் ரெயில்வே பாதுகாப்புப் படையின் சார்பில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 போலீசாரும் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டு ரெயில் நிலையத்தில் சோதனைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பயணிகள் கொண்டு வரும் உடமைகளை நுழைவாயில் அருகே வைத்து ஸ்கேன் செய்து சோதனை செய்து வருகின்றனர். இதனை மீறி பயணிகள் பட்டாசுகளை ரெயிலில் எடுத்து சென்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் ரெயில் நிலையம் பின்புறம் உள்ள பார்சல் அனுப்பும் பிரிவிலும் போலீசார் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுப்பி வருகின்றனர்.
அதேபோல், ரெயில் நிலைய வளாகம் மற்றும் பிளாட்பாரங்களில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை, மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், மாவட்டத்தில் உள்ள போத்தனூர், வடகோவை, பீளமேடு உள்ளிட்ட பிற ரெயில் நிலையங்களிலும் அந்தந்த பகுதி ரெயில்வே போலீசார், பாதுகாப்புப் படைத்துறையினர் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.