வாட்ஸ் அப்-ல் வந்த லிங்க் கிளிக் செய்ததால் பறிபோன பணம்… ரெயில்வே ஊழியர் வங்கி கணக்கில் இருந்து ரூ. 8 லட்சம் அபேஸ்..!!

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஜி.என்.மில்லை சேர்ந்தவர் நடராஜன் (வயது 83). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். சம்பவத்தன்று இவரது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் உடனடியாக மின் கட்டணத்தை செலுத்த வில்லை என்றால் இரவுக்குள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. உடனடியாக பணத்தை செலுத்த இந்த லிங்கை அழுத்தவும் என கூறப்பட்டு இருந்தது.
இதனையடுத்து நடராஜன் அந்த லிங்கை அழுத்தினார். பின்னர் அந்த லிங்கிற்கு ரூ.10 முன்பணம் அப்பினார்.அதன் பின்னர் நடராஜனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக அந்த பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்று தனது வங்கி கணக்கை ஆய்வு செய்தார். அப்போது அதில் இருந்து ரூ. 8 லட்சத்து 7 ஆயிரத்து 600 பணம் எடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதில் அதிர்ச்சியடைந்த நடராஜன் இது குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலியான லிங்கை அனுப்பி முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 8 லட்சத்து 7 ஆயிரத்து 600 பணத்தை எடுத்து மோசடி செய்த மர்மநபரை தேடி வருகிறார்கள்.