கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள காளட்டியூரை சேர்ந்தவர் தீபக் ஈஸ்வரன் (வயது 20) இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக இவர் தனது நண்பர்களுடன் குனியமுத்தூர் பி .கே. புதூரில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு தீபக் ஈஸ்வரன் தங்கியிருக்கும் அறைக்குள் அவருடன் படிக்கும் 2 மாணவர்கள் உட்பட 6 பேர் அத்துமீறி புகுந்தனர் .பின்னர் அவர்கள் தீபக் ஈஸ்வரனிடம் கஞ்சா உள்ளதா? என்று கேட்டனர். அதற்கு அவர் என்னிடம் கஞ்சா இல்லை என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 6 பேரும் சேர்ந்து சத்தம் போட்டால் அடித்து கொலை செய்துவிடுவோம் என்று கூறி மிரட்டினர் . பின்னர் அவரை அங்குள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து கஞ்சா விற்பனை மூலம் உனக்கு அதிக வருமானம் வருவது எங்களுக்கு தெரியும். எனவே நீ சம்பாதித்த பணத்தில் ரூ. 15 லட்சம் எங்களுக்கு கொடுத்தால் விட்டு விடுவோம். இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று அறைக்குள் தீபக் ஈஸ்வரனை அடைத்து வைத்தனர். மேலும் அவரிடம் இருந்து விலை உயர்ந்த 3 செல்போன்களையும் கொள்ளை அடித்து விட்டு சென்று விட்டனர். பின்னர் அங்கிருந்து தப்பி வந்த தீபக் ஈஸ்வரன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தீபக் ஈஸ்வரனை கடத்தி அறையில் அடைத்து வைத்து மிரட்டி பணம் கேட்ட கல்லூரி மாணவர்கள் ஷெல்டன் ( வயது 20) ஹரிஷ் ( வயது 20) மற்றும் கூலி தொழிலாளிகள் சரவணன் ( வயது 19) சதாம் உசேன் ( வயது 31) ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவான பினாஸ், ஷியாம் ஆகிய 2 பேரை தேடி வருகிறார்கள்.இந்த நிலையில் மாணவர் தீபக் ஈஸ்வரனின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் தீபக் ஈஸ்வரன் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததும், கேரளாவில் இருந்து அதிக அளவில் கஞ்சா கடத்தி வந்து கோவையில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபக் ஈஸ்வரனையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சா மற்றும் விலை உயர்ந்த பைக், பறிமுதல் செய்யப்பட்டது .மேலும் தீபக் ஈஸ்வரனுடைய கூட்டாளிகள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
Leave a Reply