கோவையில் மிஸ் தமிழ்நாடு 2023 அழகிப் போட்டி..!

கோவை நவ இந்தியா பகுதியில் மிஸ் தமிழ்நாடு அழகிபோட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

கோவை மற்றும் பொள்ளாச்சியில் இருந்து தலா ஒரு போட்டியாளர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்களும் பார்வையாளர்கள் முன்னிலையில் பாரம்பரிய மற்றும் மேற்கத்திய உடைகள் அணிந்து பூனை நடைபோட்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் புகழ் சனம் செட்டி, ஷரினா உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்றனர். அவர்கள், போட்டியாளர்களிடையே பெண்ணியம் என்பது என்ன? அழகு என்பது எதில் உள்ளது? தமிழ் மொழியின் சிறப்புகள் என்ன என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இந்த போட்டியில் 21 வயதான அக்‌ஷதா தாஸ் என்ற போட்டியாளர் மிஸ் தமிழ்நாடு பட்டத்தைப் பிடித்தார். அவருக்கு 2023 மிஸ் தமிழ்நாடு போட்டிக்கான கிரீடம் வழங்கப்பட்டது. டாக்டர் தளிகா 2-வது இடத்தையும், சுபிக்ஷா 3-வது இடத்தையும் பிடித்தனர். அவர்களுக்கும் விருதுகள் வழக்கப்பட்டது. பார்வையாளர்களை கவரும் விதமாக நிகழ்ச்சியில் இசை கச்சேரியும் நடைபெற்றது. கோவையில் நடந்த அழகிபோட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.