கோவை, நீலகிரியில் ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் 39 பேர் கைது..!

கோவை: தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு கஞ்சாவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.தமிழகம் முழுவதும் 2 முறை தீவிர கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்தில் போலீசார் மேற்கொண்ட கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையில் 200-க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது. தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும் போதைக்கு எதிரான பிரசாரமும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆபரசேன் கஞ்சா வேட்டை 3.0 என்று பெயரிட்டுள்ள போலீசார் கஞ்சா வியாபாரிகள், கஞ்சா செடி பயிரிட்டவர்கள் என போலீசார் தீவிர வேட்டை நடத்தி கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நடவடிக்கையின் காரணமாக கடந்த 5 நாட்களில் மட்டும் கோவை மாவட்டத்தில் 34 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் 26 பேர் புறநகர் மாவட்ட போலீசாராலும், 8 பேர் கோவை மாநகர போலீசாராலும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த கஞ்சா பாக்கெட்டுகள், கஞ்சா செடிகள், கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கல்லூரிகளில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடந்து வருகிறது. தேர்வுகள் முடிந்து மீண்டும் வகுப்புகள் தொடங்கும் போது மாணவர்கள் மத்தியில் போதை விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கேத்தி, குன்னூர், கூடலூர், தேவாலா ஆகிய பகுதியில்போலீசார் நடத்திய கஞ்சா வேட்டையில் நேற்று ஒரே நாளில 5 பேர் கைது செய்யப்பட்டனர்.