மேட்டுப்பாளையம் – நெல்லை சிறப்பு ரெயில் மூலம் ரூ. 80 லட்சம் வருமானம்- தொடர்ந்து இயக்க வேண்டுகோள்.!

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்ட மேட்டுப்பாளையம் – நெல்லை சிறப்பு ரெயில்கள் மூலம் 2 1/2 மாதங்களில் 80 லட்சம் ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது.
நெல்லையில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரெயில் பெட்டிகளை கொண்டு இந்த சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதன் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதால் இந்த மேட்டுப்பாளையம் நெல்லை சிறப்பு ரெயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 21 முதல் ஜூன் 27 வரை வியாழக்கிழமைதோறும் நெல்லை – மேட்டுப்பாளையம், வெள்ளிக்கிழமை தோறும் மேட்டுப்பாளையம் நெல்லை இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரெயில்கள் கோவை, பொள்ளாச்சி, பழனி , திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம், தென்காசி, அம்பை வழியாக கோடைகால சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டன. பொள்ளாச்சி பழநி வழியாக தென்மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில் இயக்கப்படும் முதல் ரெயில் இதுவாகும். இந்த வாராந்திர சிறப்பு ரெயில்களுக்கு பயணிகளிடையே சிறப்பான வரவேற்பு இருந்தது.

நெல்லை – மேட்டுப்பாளையம் ரெயில் 7814 பயணிகளுடன் 38 லட்சம் வருமானமும், மேட்டுப்பாளையம் – நெல்லை ரெயில் 8380 பயணிகளுடன் 42.14 லட்சம் வருமானமும் தந்துள்ளது. 2 1/2 மாதங்களில் இரு மார்க்கங்களிலும் 10 சேவைகள் இயக்கப்பட்ட இந்த வாராந்திர சிறப்பு ரெயில்களையும் சேர்த்து மொத்தம் 16194 பயணிகளுடன் 80 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. வருமானம் தரும் மேட்டுப்பாளையம் நெல்லை இடையே இயக்கப்படும் இந்த வாராந்திர சிறப்பு ரெயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது , தற்போது வியாழக்கிழமைதோறும் நெல்லை – மேட்டுப்பாளையம், வெள்ளிக்கிழமை தோறும் மேட்டுப்பாளையம் நெல்லை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது குற்றாலத்தில் குளுகுளு சீசன் நிலவி வருவதாலும், சாரல் விழா நடைபெற்று வருவதாலும் தென்காசி வழியாக செல்லும் இந்த நெல்லை – மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
மேலும் இந்த சிறப்பு ரெயில்கள் தட்கல் கட்டணத்தில் இயக்கப்படுவதால் ரெயில்வேக்கும் கணிசமான வருமானம் கிடைக்கிறது. எனவே தென்காசி, மதுரை, திண்டுக்கல், பழ னி வழியாக மேட்டுப்பாளையத்துக்கும் இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயிலை நிரந்தரமாக இயக்க தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில் இயக்கம் வரும் ஆகஸ்டு 18-ந் தேதி முடிவடைய இருப்பதால் உடனடியாக தென்னக ரெயில்வே இந்த சிறப்பு ரெயில்களை நீட்டித்து இயக்க அறிவிப்பு வெளியிட வேண்டும். தற்போது ரெயில் இயங்கிக் கொண்டிருக்கும் போதே நீட்டித்து இயக்க அறிவிக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் தொடர்ந்து முன்பதிவு செய்து கொள்ள எளிதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.