நண்பருடன் பேசி கொண்டு இருந்த இளம்பெண்ணை போட்டோ எடுத்து மிரட்டிய 4 பேர் கொண்ட கும்பல் கைது..

கோவை மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 30
வயது இளம்பெண். இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து
வருகிறார்.
இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இவர் தனது கணவரை பிரிந்து
கஞ்சப்பள்ளி பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அந்த இளம்பெண் பணிக்கு சென்று விட்டு மாலை தனது
நண்பர் கார்த்திகேயன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
கஞ்சப்பள்ளி முல்லை நகர் அருகே வந்தபோது 2 பேரும் மோட்டார் சைக்கிளை
நிறுத்தி பேசி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு குடிபோதையில் வந்த 4
வாலிபர்கள் திடீரென இளம்பெண்ணிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் அந்த வாலிபர்களிடம்
அங்கிருந்து செல்லுமாறு கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம்
ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் கார்த்திகேயனை தாக்கி
உள்ளனர்.

மேலும் வந்த வாலிபர்கள் அந்த இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடக்க
முயன்றதாக தெரிகிறது. அப்போது அவர்கள் அந்த இளம்பெண்ணையும்,
கார்த்திகேயனையும் போட்டோ எடுத்தனர். பின்னர் 4 வாலிபர்களும் அவர்கள் எடுத்த போட்டோவை காட்டி இதனை வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் எனவும், அனைவரிடமும் காட்டி விடுவோம் என கூறிவிட்டு தப்பிச் சென்றனர்.இதுகுறித்து அந்த இளம்பெண் அன்னூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் கஞ்சப்பள்ளி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் கதிர்வேல் (27),
வடிவேல் (32), சொக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்குமார் (28)
மற்றும் ஆறுமுகம் (38) ஆகியோர் இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டது
தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நண்பர்கள் 4 பேரை கைது செய்தனர்.
அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.