விளையாட்டு வீரர்களுக்கு மெகா ஜாக்பாட்: ஒலிம்பிக் பதக்கத்திற்கு ₹5 கோடி!

தமிழகத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தவும், சர்வதேச அளவில் தமிழக வீரர்கள் சாதனை படைப்பதை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு புதிய திட்டங்களும், பரிசுத்தொகை உயர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற சிறப்பு விழாவில், ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ எனும் புதிய திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். 2036-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்றுப் பதக்கங்களை வெல்வதை இலக்காகக் கொண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திறமையான வீரர், வீராங்கனைகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான சர்வதேச அளவிலான உலகத்தரப் பயிற்சிகள், நவீன உபகரணங்கள் மற்றும் தேவையான நிதி உதவிகள் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

அதன்பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தங்கப் பதக்கம் வென்றால் ₹5 கோடி, வெள்ளி பதக்கம் வென்றால் ₹3 கோடி
வெண்கலப் பதக்கம் வென்றால் ₹2 கோடி வழங்கப்படும்.

அதேநேரத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உலகத் தொடர்கள்) வெற்றி பெற்று நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்த தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகைகளும் பாராட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி

வாஷிங்டன் சுந்தருக்கு சிறப்பான பங்களிப்பிற்காக ₹75 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கமலினிக்கு ₹75 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

வித்யா ராமராஜ் தடகளப் பிரிவில் தொடர்ந்து 3 பதக்கங்களை (தங்கம் உள்ளிட்டவை) வென்று சாதனை படைத்ததற்காக மொத்தமாக 1.55 கோடி ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டது.

அபிநயா தொடர் ஓட்டப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அபிநயாவுக்கு ₹30 இலட்சம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டது. பரணிக்கா இளங்கோவன் கம்பம் தாண்டுதல் போட்டியில் வெண்கலம் வென்ற பரணிக்கா இளங்கோவனுக்கு ₹30 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இத்திட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களின் திறமையை மேலும் ஊக்கப்படுத்தி சர்வதேச அரங்கில் நாட்டிற்குப் பெருமை சேர்க்க வழிவகுக்கும்.