பயில்வான் ரங்கநாதன் மீது நடிகர் அர்ஜுன் புகார்!

நடிகர் அர்ஜுனின் மகள் குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்ததோடு, அவரிடம் நேற்று 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

நடிகர் அர்ஜுன் கடந்த 19-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், ”எனது இளைய மகளின் திருமணத்தின்போது, எனது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு யூகங்களும், விவாதங்களும் எழுந்தன.ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமையும், தனக்குப் பிடித்தபடி வாழும் சுதந்திரமும் உள்ளது. நடிகர்களாகிய நாங்கள் பொதுவாழ்க்கையில் இருக்கும் போது, யூகங்களும் விமர்சனங்களும் தவிர்க்க முடியாதவை என்பதைப் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், யூகங்களுக்கும், அடிப்படை ஆதார மற்ற குற்றச்சாட்டுகளைத் திட்டமிட்டு பரப்புவதற்கும் இடையே வேறுபாடு உள்ளது. எந்தவித ஆதாரமும் இன்றி ஒரு பெண்ணை மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையானவர் என்று முத்திரை குத்துவது உள்ளிட்ட ஆதாரமற்ற மற்றும் இழிவான கருத்துகளை தெரிவிப்பது பொறுப்பற்றது. எனது மகள் குறித்து சிலர் ஆதாரமற்ற மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்து இருந்தார். அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், அர்ஜுன் மகள் குறித்து நடிகர் பயில்வான் ரங்கநாதன் அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத் துதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், நடிகர் பயில்வான் ரங்கநாதனை நேற்று விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சைபர் க்ரைம் போலீஸார் சம்மன் அனுப்பியதை அடுத்து, அவர் நேற்று காலை 11 மணியளவில் வேப்பேரியில் உள்ள சைபர் க்ரைம் போலீஸாரிடம் நேரில் ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.