சர்வதேச 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி… தமிழகம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி… பொது மக்கள் உற்சாக வரவேற்பு..!!

கோவை : 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி, நாடு முழுவதும் பயணித்து, போட்டி நடைபெறும் தமிழகம் வந்தடைந்தது. செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில், சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. வரும் 28ம் முதல் ஆகஸ்ட் 10 வரை, செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளை சேர்ந்த 2000-க்கும் வீரர் – வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதற்கான விரிவான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இந்த பிரம்மாண்ட செஸ் போட்டியை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தப் போட்டி குறித்து நாடு முழுவதும் விழிப்புணாவு ஏற்படுத்தும் வகையில் கடந்த 19-ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இந்த ஜோதி நாடு முழுவதும் பயணித்து இன்று தமிழகம் வந்தடைந்தது. புதுச்சேரியில் இருந்து கோவை பந்தய சாலைக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவையில் ஒலிம்பியாட் ஒலிம்பிக் ஜோதி கொடிசியா வளாகத்தில் இதற்கான விழா நடைபெறவுள்ளது. இதில் அமைச்சா்கள் செந்தில்பாலாஜி, மு.பெ.சாமிநாதன், கா.ராமசந்திரன், என்.கயல்விழி செல்வராஜ், முத்துசாமி ஆகியோா் கலந்துகொள்கின்றனர்.. ஈரோடு, திருப்பூா், நீலகிரி மாவட்ட ஆட்சியா்கள் கெளரவ விருந்தினா்களாகக் பங்கேற்கின்றனர். ஒலிம்பியாட் ஒலிம்பிக் ஜோதி தொடக்க விழாவை முன்னிட்டு, கொடிசியா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள வளைவினை அமைச்சா்கள் திறந்துவைத்து, வண்ண பலூன்களைப் பறக்க விடுகின்றனா்.

இதைத் தொடா்ந்து, பரதநாட்டியம், ஹிந்துஸ்தான் கலைக் கல்லூரி மாணவா்களின் சிலம்பாட்டம், மேற்கத்திய நடனம், ஒலிம்பியாட் கேக் வெட்டும் நிகழ்வு, இசை ஆல்பம் திரையிடுதல் உள்ளிட்டவை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்ததையொட்டி கோவை பந்தய சாலை முதல் கொடீசியா வரை மாரத்தான் போட்டியும் நடைபெறுகிறது.

இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் செஸ் ஒலிம்பியாட் ஜோதி எடுத்துச் செல்லப்படுகிறது. தங்கள் பகுதிக்கு வரும் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்க, பொதுமக்களும், விளையாட்டு வீரர்களும், அரசு அதிகாரிகளும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.