பட்டு உற்பத்தியில் விரைவில் சீனாவை இந்தியா முந்தும்’ என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். சர்வதேச பட்டுப்புழு வளர்ப்பு ஆணையத்தின் சார்பில் 27-வது சர்வதேச பட்டு வளர்ப்பு மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. நவ.27-ம் தேதி வரை நடைபெறும் இந்த உலகளாவிய உச்சி மாநாடு, ‘நிலைப்புத் தன்மையுள்ள எதிர் காலத்துக்கான பட்டு’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறுகிறது. இதில் 25-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இம்மாநாட்டை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா, உகாண்டா நாட்டின் அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சர் ஜோனார்ட் அசிம்வே அகிகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சர்வதேச பட்டு வளர்ப்பு ஆணையத்தின் பொதுச் செயலாளர் பி.சிவக்குமார் பேசும் போது, ”பட்டின் நிலைப்புத் தன்மையை பொறுத்தவரை, உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட நிலைப்புத் தன்மை தரநிலைகளை உருவாக்குவது, சுழற்சி முறையிலான கழிவில்லா தொழில் நுட்பங்களை விரைவுபடுத்துவது மற்றும் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான சிறு விவசாயிகள், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது ஆகியவை முக்கிய சவால்களாகும். இவற்றுக்குத் தீர்வு காணவும், தொழில்துறை பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் முக்கியத் தளமாகவும் இம்மாநாடு அமையும்” என்றார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறும்போது, ”பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் சர்வதேச பட்டுப்புழு வளர்ப்பு ஆணையத்தை ஒரு தசாப்தத்துக்கும் மேலாக வழிநடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்தது மிகப்பெரிய வெற்றியாகும். இதன் காரணமாக நாட்டில் பட்டுப்புழு வளர்ப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. 2014-ம் ஆண்டில் 26 ஆயிரம் டன்னாக இருந்த இந்தியாவின் பட்டு உற்பத்தி, இன்று 42 ஆயிரம் டன்னுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. விரைவில் பட்டு உற்பத்தியில் சீனாவை இந்தியா முந்தும். பட்டு உற்பத்தியில் கர்நாடகா, தமிழகம் முதல் இடத்திலும், ஆந்திரா, தெலங்கானா 2-ம் இடத்திலும் உள்ளன. வட இந்தியாவிலும் இதை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது” என்றார்.








