மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு விவகாரம் : ஆதார் ஆவணம்.. உதகை பள்ளி ஆசிரியரிடம் 60 மணி நேரம் விசாரணை..!

ங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உதகை ஆசிரியரிடம் நடத்தப்பட்ட 60 மணி நேர விசாரணை நிறைவடைந்த நிலையில், அவர் மேல் விசாரணைக்காக மங்களூரு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடகா மாநிலம் மங்களூருவில், ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கின் குற்றவாளியாக கருதப்படும் முகமது ஷாரிக் தமிழகத்தில் கோவை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்கள் தங்கி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து இந்த பகுதிகளில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் தங்கி இருந்த பகுதிகளில் யாருடன் சந்தித்து பேசினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக கோவையில் மூன்று நாட்கள் காந்திபுரம் பகுதியில் உள்ள MMV தங்கும் விடுதியில் முகமது ஷாரிக் தங்கி உள்ளார். அப்பொழுது தனது அடையாளத்தை மாற்றி கௌரி அருண்குமார் என்ற பெயரில் போலியான கர்நாடக மாநில முகவரி கொடுத்து அவர் தங்கி சென்றிருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் காந்திபுரத்தில் தங்கி இருந்த விடுதியில் பக்கத்து அறையில் தங்கியிருந்த தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்தரிடம் பழகி அவருடைய ஆதார் ஆவணத்தை வைத்து சிம் கார்டு வாங்கி இருப்பதும் ஆனால் அந்த சிம் கார்டில் இருந்து கோவை உட்பட எந்த பகுதிக்கும் பேசவில்லை என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தையடுத்து போலீசார், குந்தசப்பை கிராமத்தை சேர்ந்த சுரேந்தரிடம் 60 மணி நேரம் விசாரணை நடத்தினர். 2 நாட்களாக ரகசிய இடத்தில் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றதையடுத்து, நேற்றிரவு போலீசார் சுரேந்தரை அவரது இல்லத்தில் விடுவித்தனர்.