ஜம்மு சர்வதேச எல்லையில் 2 ஊடுருவல்களை முறியடித்த பாதுகாப்பு படை வீரர்கள்: ஒருவர் சுட்டுக் கொலை – 5 தீவிரவாதிகள் கைது..!

ம்மு: ஜம்முவின் சர்வதேச எல்லையில் 2 ஊடுருவல்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்தனர். இதில், ஊடுருவிய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் ஆர்எஸ்.புராவில் அர்னியா சர்வதேச எல்லை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2.30 மணியளவில் மர்மநபர் நடமாட்டம் தெரிந்தது. ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த நபரை எச்சரித்துள்ளனர். அவர் சர்வதேச எல்லையை தாண்டி இந்திய பகுதிக்குள் நுழைந்துள்ளார். கட்டுப்பாடு வேலியை நோக்கி முன்னேறியுள்ளார். வீரர்கள் பலமுறை எச்சரித்தும் அந்த நபர் அதனை பொருட்படுத்தவில்லை. இதனையடுத்து, வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அந்த ஊடுருவியர் உயிரிழந்தார்.

இதேபோல், அதிகாலை 4.30 மணியளவில் இந்த்ரேஸ்வர் நகர் சர்வதேச எல்லை பகுதியில் ஒருவர் ஊடுருவ முயன்றுள்ளார். வீரர்கள் அவரை எச்சரித்துடன் அவர் கைகளை உயர்த்தி சரண் அடைவதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, அவரை கைது செய்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இருந்து பதுங்கி இருந்த ஒரு பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து ஏகே ரக துப்பாக்கிகள், வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின், பூஞ்ச்சில் நடந்த பூஞ்ச் இணைப்பு தின பிளாட்டின விழாவில் வடக்கு ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி பேசுகையில், ‘ஜம்மு காஷ்மீருக்குள் 300 தீவிரவாதிகள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எந்த செயலிலும் ஈடுபட முடியாமல் இருக்கின்றனர் என உறுதியாக கூறுகிறோம். இது தவிர 160 பேர் எல்லைக் கட்டுப்பாடு கோடு வழியாக ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்காக காத்திருக்கின்றனர்’ என்றார்.