வழக்குகளை விரைந்து முடிப்பதில் சென்னை உயர்நீதி மன்றம் தான் முதலிடம்- ஐகோர்ட்டு முதன்மை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி பெருமிதம்..!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீதித்துறை விருந்தினர் மாளிகையை சென்னை ஐகோர்ட்டு முதன்மை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் ஐகோர்ட்டு முதன்மை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்ச ரின் முன்னெடுப்பில் நீதித்துறை கட்டுமானங்கள் வேகமெடுத்து வருகின்றன. சென்னை உயர்நீதிமன்றம் தான் நிலுவையில் உள்ள அதிக வழக்குகளை தீர்த்து வைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வழக்குகளை முடித்து வைக்கும் சதவீதம் 109 சதவீதமாக உள்ளது. ஒரு மாதத்தில் 100 வழக்குகள் தாக்கல் ஆகிற இடத்தில் 109 வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன. தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விட முடித்து வைக்கப்படும் வழக்குகள் அதிகமாக உள்ளது. தமிழக அரசிடம் 116 நீதிமன்ற அறைகள் வேண்டும் என கேட்டிருந்தோம் ஆனால் 150 நீதிமன்ற அறைகள் கட்டுவதற்கு விரைவாக நிதி ஒதுக்கப்பட்டது பாராட்டுக்குரியது.
நீதித்துறைக்கு தேவையான நீதிபதிகளில் மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகள் பணியிடங்களே இருக்கும் நிலையிலும் வழக்குகளை விரைந்து முடித்து வருகிறோம் . சென்னையில் நடைபெற்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் சென்னை உயர்நீதிமன்றம் நாட்டிலேயே முன்னணியில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பாராட்டினார். தமிழக அரசின் உதவி இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.