சுந்தரா டிராவல்ஸ் பட பஸ் போல… கிழிந்த இருக்கைகள்.. கடகட சத்தம்.. கோவையில் இருந்து பழனிக்கு இயக்கப்படும் அரசு பேருந்தின் அவலம்..!

கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து பழனி, பொள்ளாச்சி, உடுமலை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் 100-க்கும் அதிகமான அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் தொழில் நிமித்தமாகவும், வேலைக்காகவும் ஒரு நாளைக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் கோவையில் இருந்தும், பொள்ளாச்சி, பழனி பகுதிகளில் இருந்து கோவைக்கும் பயணம் செய்து வருகின்றனர். பெரும்பாலும் மக்கள் அரசு பஸ்சில் பயணிக்கவே விரும்புவார்கள். ஆனால் தற்போது அரசு பஸ்கள் எந்தவித பராமரிப்பின்றியும், பஸ்சில் இருக்கைகள் கிழிந்தும், மேற்கூரை பராமரிப்பு இன்றியும் காணப்படுகிறது.
இதனால் மக்கள் அரசு பஸ்களை தவிர்த்து விட்டு தனியார் பஸ்களில் பயணம் செய்யவே விரும்புகின்றனர். இதனால் அரசு பஸ்களை விட தனியார் பஸ்களில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:- ஏராளமான அரசு பஸ்கள் சரியான பராமரிப்பு இன்றி டப்பா போன்று காட்சியளிக்கிறது. பஸ்சுக்குள் அமர்ந்து பயணம் செய்யும்போது கடகடவென்று சத்தமும், இரைச்சலும் வருகிறது. இது நமக்கு ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும் விதமாக காணப்படுகிறது. ஆங்காங்கே திடீரென்று பிரேக் டவுனாகி பஸ்கள் நின்றும் விடுகிறது. இதனால் நாங்கள் சரியான நேரத்திற்கு செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடிவதில்லை. பஸ் நிற்கும் போது, பயணிகளை, கீழே இறங்கச் சொல்லி தள்ள வைக்கும் நிலையும் காணப்படுகிறது.
ஆனால் தனியார் பஸ்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகின்றன. பயணமும் எளிதாக இருக்கிறது. நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு நேரத்துக்குள் செல்லவும் முடிகிறது. இதன் காரணமாகவே நாங்கள் தனியார் பஸ்களை தேர்வு செய்கிறோம். மேலும் பஸ்சுக்குள் அமர்ந்து பயணம் செய்யும்போது ஜன்னலில் பொருத்தப்பட்ட கண்ணாடிகள் கட கட கடவென்று ஆடிக்கொண்டிருக்கும் சூழ்நிலை உள்ளது. அது உடைந்து நம் மீது விழுந்து விடுமோ என்ற பயமும் ஏற்படும் வண்ணம் உள்ளது. பல பஸ்களில் ஜன்னல் கண்ணாடிகளை அடைக்கவும், திறக்கவும் முடிவதில்லை. அமர்ந்திருக்கும் இருக்கை உடைந்து முன்னும் பின்னுமாக ஆடிக் கொண்டிருக்கிறது.
நாம் அமரக்கூடிய இருக்கையை காணும்போது புழுதி பறந்த நிலையில் அழுக்காக உள்ளது. ஆனால் தனியார் பஸ்களில் நன்றாக கழுவி பல பல வந்து காட்சி அளிக்கும் வண்ணம் உள்ளது. எனவே தமிழக அரசு பழைய பஸ்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய பஸ்களை இயக்க வேண்டும். அப்போது தான் மக்கள் அரசு பஸ்களில் பயணம் செய்ய விரும்புவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.