காற்று மாசுவால் குறையும் இந்தியர்கள் ஆயுள் காலம் .. ஆய்வில் அதிர்ச்சி தகவல்… மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..!!

டெல்லி: இந்தியாவில் காற்று மாசு காரணமாக மக்களின் சராசரி ஆயுள் காலம் 5 ஆண்டுகள் குறையும் என்ற அதிர்ச்சித் தகவல் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்திருக்கும் நிலையில் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் கடிதம் எழுதி இருக்கிறது.

உலக புகழ்பெற்ற சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஏர் குவாலிட்டி லைப் இண்டெக்ஸ் (AQULI) என்ற அமைப்பு மனித வாழ்க்கை மற்றும் உடல் ஆரோக்கத்தில் காற்றின் தரம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டது.

இதில் காற்று மாசு காரணமாக ஏற்படும் விளைவுகள், இந்தியாவில் காற்று மாசால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வேறு அதிர்ச்சிகர தகவல் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்தே மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

அதில், “உயிர் வாழ்வதற்கான உரிமைக்கு காற்று மாசு அச்சுறுத்தலாக திகழ்கிறது. 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தேசிய காற்று சுத்திகரிப்பு திட்டத்தின் நிலை குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த முக்கியமான பிரச்சனையாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அதில் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகின. அதில், “இந்தியாவில் இருக்கும் கங்கை நதியை சுற்றியுள்ள சமவெளி பகுதிதான் உலகிலேயே அதிகம் மாசடைந்த பகுதியாக இருக்கிறது. பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரையிலான இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் சராசரி ஆயுட் காலத்தில் 7 ஆண்டுகள் 6 மாதங்கள் இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

அதிக மாசு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் முதலிடத்தில் இருக்கிறது. தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் புகையே இந்த காற்று மாசுவுக்கான முக்கிய காரணம். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டபோதிலும், காற்று மாசு அதிகரித்து இருக்கிறது.

தாயின் வயிற்றில் வளரும் சிசு தொடங்கி பலருக்கு சுகாதார சீரழிவை காற்று மாசு ஏற்படுத்துகிறது. இந்த நிலை தொடர்ந்தால் சராசரி இந்தியர்களின் ஆயுட்காலத்திலிருந்து 5 ஆண்டுகள் குறையும் அபாயம் ஏற்படும். உலக அளவில் காற்று மாசு காரணமாக ஆயுட் காலம் 2.2 ஆண்டுகள் குறையும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகள் அதிக காற்று மாசு உள்ளது.

குறிப்பாக டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில்தான் காற்று மாசு மிக மோசமான அளவில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இதே நிலை நீடித்தால் டெல்லி மக்களின் சராசரி ஆயுள் 10.1 ஆண்டுகள், உத்தரப்பிரதேச மக்களின் சராசரி ஆயுள் 8.9 ஆண்டுகள், பீகார் மக்களின் ஆயுள் 7.9 ஆண்டுகளாக குறையும் அபாயம் உள்ளது.” என்று எச்சரித்து இருக்கிறது.