இந்த சோதனை முடியட்டும் நான் பேசுகிறேன்.. எதையும் எதிர்கொள்ள தயார் – அமைச்சர் செந்தில் பாலாஜி..!

னது வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி..

தமிழ்நாட்டில் சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பசுமை வழிச்சாலையில் அமைச்சரின் அரசு இல்லம், கரூரில் உள்ள அமைச்சரின் பூர்விக வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் வீட்டில் மத்திய படையினர் பாதுகாப்புடன் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை சோதனையின்போது பிரச்சனை ஏற்பட்ட நிலையில் மத்திய படை பாதுகாப்புடன் சோதனை நடைபெறுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சரின் நண்பர், உறவினர்களின் வீடு, அலுவலகங்களில் 8 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

தற்போது சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை சோதனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை சோதனை குறித்த தகவல் எனக்கு முன்கூட்டியே சொல்ல வேண்டிய அவசியமில்லை. சட்டபூர்வமாக சொல்லமாட்டார்கள். நான் நடைப்பயிற்சி மேற்கொள்ள சென்றுவிட்டேன், செல்லும் வழியில் தான் தகவல் வந்தது. இதனால், கூட வந்த நண்பர்களை அனுப்பிவிட்டு, வீட்டிற்கு திரும்ப வந்துவிட்டேன்.

என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம், வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டது. தற்போது, அமலாக்கத்துறை சோதனைக்கும் முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறேன். எந்த ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டாலும் சொல்வதற்கு தயார் எனவும் தெரிவித்தார்.

என்ன நோக்கத்தில் அமலாக்கத்துறை வந்துள்ளது, என்ன தேடுகிறார்கள் என்பதை பார்ப்போம், இந்த சோதனை முடிந்தபின் விளக்கமாக பேசுகிறேன். மேலும், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராக இருப்பதாகவும், சோதனை நடந்து வருகிறது, முடிவில் தான் எங்கு ஆஜராவது என தெரியவரும் எனவும் கூறினார்.