பெண்களை கேலி, கிண்டல் செய்த தட்டி கேட்ட ரயில்வே ஊழியருக்கு அரிவாள் வெட்டு- வாலிபர் மீது வழக்குபதிவு .!

கோவை வெள்ளலூர் ரயில்வே காலனியை சேர்ந்தவர் சண்முகம்(62). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் நேற்று பள்ளியில் படிக்கும் தனது பேரனை அழைத்து வர சென்றார். அப்போது அவர் வெள்ளலூர் ரோடு மகாலிங்கபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கிருந்த வாலிபர் ஒருவர் அந்த வழியாக செல்லும் இளம்பெண்களை கேலி, கிண்டல் செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த சண்முகம் அந்த வாலிபரை ஏன் இப்படி செய்கிறாய்? என கேட்டு கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசி மறைத்து வைத்திருந்த அரிவாளால் சண்முகத்தை வெட்டி மிரட்டி விட்டு சென்றார். இதில் சண்முகத்துக்கு கழுத்து, கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக போத்தனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சண்முகத்தை அரிவாளால் வெட்டியது அதேபகுதியை சேர்ந்த அந்நியன்(எ) சதா (27) என்பது தெரியவந்தது. போலீசார் தாக்குதல், கொலைமிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவரை தேடி வருகின்றனர்.