அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தவறுகளில் இருந்து பாடம் கற்கணும்- ஐதராபாத் செயற்குழு கூட்டத்தில் மோடி பேச்சு..!!

நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைப் பார்த்து கேலி செய்யாமல் அவர்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என கட்சியினரிடம் மோடி வலியுறுத்தியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் இரு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் தெலங்கானா மாநிலம் ஐதராபாதில் நடைபெற்றது. ஐதராபாத்தின் சர்வதேச மாநாடு மையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 19 மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தனி விமானத்தில் வந்த பிரதமர் மோடி ஐதராபாதில் தங்கி, மாநாட்டின் இருநாள்களிலும் பங்கேற்றார். முதல் நாள் கூட்டத்தில் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பொருளாதாரம் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில் கட்சித் தலைவர் நட்டா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று உரையாற்றினர்.

கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, வாழ்நாள் முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்ட திரவுபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என வர்ணித்தார். அவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அது நாட்டிற்கே கவுரவமாக அமையும் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைப் பார்த்து கேலி செய்யாமல் அவர்கள் செய்த தவறுகளை பார்த்து அதில் இருந்து பாடம் கற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தெலங்கானாவில் பாஜகவின் இரட்டை என்ஜின் ஆட்சி அமையும் போது வளர்ச்சி பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும், தெலங்கானாவின் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். கடந்த 8 ஆண்டுகளில், தெலங்கானா மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையின் தொலைவு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, தெலங்கானா. மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் வாரிசு அரசியல் ஒழிந்து அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் நாடு முழுவதும் பாஜக-வின் யுகமாகவே இருக்கும் என தெரிவித்தார்.

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெலங்கானாவில் கேசிஆர் தலைமையிலான ஆட்சி ஊழலில் ஊறித் திளைப்பதாகவும் நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.