பொதுக் குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியை தான் அணுக வேண்டும்-ஓபிஎஸ் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பொதுக் குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியை தான் அணுக வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவும், நிர்வாகிகளை தண்டிக்கவும் கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த கூடுதல் மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சண்முகம் தரப்பு முன்வைத்த வாதம்:

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 வரைவு தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டன. ஆனால் மேலும் சில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவை மீறி அவைத் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்மகன் உசேன் நியமனத்திற்குத் தடை விதிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியவர்களை தண்டிக்க வேண்டும் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இ.பி.எஸ் தரப்பு தனது வாதத்தை முன்வைத்தது. ‘மேல்முறையீ’ட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததா என ஆராய வேண்டும். அப்படி இருக்கையில் இந்த கூடுதல் மனுக்களும் விசாரணைக்கு உகந்ததல்ல. அவைத் தலைவரை நியமிக்க ஒ.பி.எஸ் ஒத்துகொண்டார். ஓபிஎஸ் நலனுக்கு எதிராக கட்சி விதிகளில் திருத்தம் வரலாம் என்ற எண்ணத்திலேயே ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘ஓ.பி.எஸ் தரப்பு ஒப்புக் கொண்டார் என்பதற்கு ஆவண ஆதாரங்கள் இருந்தால் தாக்கல் செய்யுங்கள்’ என்று தெரிவித்தனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர்கள், ‘ஓபிஎஸ், இபிஎஸ் மட்டுமே பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும். அவைத் தலைவர் இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட முடியும். அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது. தற்காலிக அவைத் தலைவராக மட்டுமே தமிழ்மகன் உசேன் ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கக்பட்டார். அவரை சிறப்பு தீர்மானத்தின் மூலம் நிரந்தர அவைத்தலைவராக நியமித்தது தவறு. தற்காலிக அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்தே நியமித்தனர். ஆனால் அவரை நிரந்தர நியமனமாக்க எடப்பாடி முன்மொழிந்ததும், அதை ஜெயக்குமார் வழிமொழிந்ததும் விதிமீறல்’ என்றனர்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:

ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்த மேல் முறையீட்டில் எழுப்ப முடியாது. அவைத் தலைவர் இல்லாமல் பொதுக் குழுவை எப்படி கூட்ட முடியும். ஒருங்கிணைப்பாளர்ர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு பொதுக் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற கூடாது என பிறப்பித்த இடைக்கால உத்தரவு ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டும் பொருந்தும். அதன் பின் நடக்கும் பொதுக் குழுக்களுக்கு அல்ல. ஜூலை 11 பொதுக் குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியை தான் அணுக வேண்டும். ஜூன் 23 கூட்டம் தொடர்பாக மட்டுமே இந்த அமர்வில் விசாரிக்க முடியும். இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்கட்டும் என்று கூறிய நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர். அத்துடன், வழக்கு விசாரணை வியாழக்கிழமை (ஜூலை 7) தள்ளி வைத்தனர்.