11 மாதம் சம்பளம் பாக்கியை கேட்ட வடமாநில ஊழியரை கொலை செய்த தந்தை,மகன்-மும்பை விரைந்தது தனிப்படை போலீஸ்.!!

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் முஜாப்பூர் மாலிக் (வயது 24). இவர் கோவை பூமார்க்கெட் தெப்பக்குளம் வீதி பகுதியில் ஒரு வீட்டில் 3-வது மாடியில் வசித்து வந்தார். இவருடன் மேற்கு வங்கத்தை சேர்ந்த மான்வா என்கிற ஆனந்தகுமார் (27) என்பவரும் வசித்து வந்தார்.‌
சம்பளம்
இவர்கள் 2 பேரும் கோவையை சேர்ந்த நஜிபுல் சேட் (45) என்பவரிடம் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்து 11 மாதமாக நசிபுல் சேட், முஜாபூர் மாலிக்கிற்கு சம்பளம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.‌ சம்பவத்தன்று நசிபுல் சேட் மற்றும் அவரது மகன் அனிஷேக் (19) ஆகியோர் முஜாபூர் மாலிக் தங்கியிருந்த அறைக்கு சென்றனர்.
அங்கே அவரிடம் 2 பேரும், சம்பளம் நாங்கள் தரும்போது வாங்கிக் கொள். ஏதாவது பிரச்சினை செய்தால் நடப்பதே வேறு என மிரட்டினர். அப்போது முஜாபூர் மாலிக் சம்பளம் கொடுத்தே தீர வேண்டும். நான் சொந்த ஊருக்கு செல்கிறேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் முஜாபூர் மாலிக்கை சரமாரியாக தாக்கினர். தலையை சுவற்றில் மோதி அடித்தனர். பின்னர் அவர்கள் பக்கெட் தண்ணீரில் தலையை அழுத்தி மூச்சு திணறடித்து கொலை செய்தனர்.
அப்போது அந்த அறையில் இருந்த ஆனந்தகுமார் அதைகண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர்களை தடுக்க வந்தார். ஆனால் அவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதில் பயந்துபோன ஆனந்தகுமார் மேற்குவங்கம் சென்றுவிட்டார்.
சில நாட்களுக்குப் பின்னர் அழுகிய நிலையில் முஜாபூர் மாலிக் உடல் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து ஆர்.எஸ் புரம் போலீசார் மர்மசாவு என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கோவை திரும்பிய ஆனந்தகுமார் ஆர்.எஸ் புரம் போலீஸ் நிலையம் சென்று நடத்தவற்றை கூறினார்.‌ இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.‌ அப்போது முஜாபூர் மாலிக்கை கொலை செய்த தந்தை- மகன் நசிபுல் சேட், அனிஷேக் இருவரும் மும்பைக்கு தப்பி ஓடி அங்கு பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் மும்பை விரைந்து சென்று அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.