தமிழகம் வழியாகத்தான் சிங்கப்பூர், மலேசியாவுக்கு போதைப் பொருட்கள் கடத்துகிறார்கள் – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு.!

சென்னை: டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

போதை பொருட்கள் கடத்தல் கும்பலின் தலைவன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் ஒரு நபர் திமுக அயலக அணி பிரிவில் துணை அமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். இந்த போதைப் பொருள் விவகாரத்தில் ஜாபர் சாதிக் சிக்கிய தகவல் வெளியே கசிந்ததும், அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம் என அனைத்தையும் மூடி மறைக்க திமுக பார்க்கிறது.

ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பு எப்படி திமுகவுக்கு வந்தது, அவருடன் இணைந்து என்னவெல்லாம் நடந்திருக்கிறது, என்பதை பற்றி முதல்வர் ஸ்டாலின் தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும். பஞ்சாபில் நுழையும் போதைப் பொருட்கள் தமிழகம் வழியாகதான் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறது. இவ்வாறுதான் போதைப் பொருட்கள் அனைத்து இடங்களிலும் பரவுகிறது. தமிழகத்தில் இருந்துதான் புதுச்சேரிக்கும் போதைப் பொருட்கள் சென்றிருக்கக்கூடும். மத்திய அரசு 1.40 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை இதுவரை அழித்துள்ளது.

பாஜக அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் போதைப் பொருள் பயன்படுத்துபவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. யார் வேண்டுமானாலும், முதல்வர் குடும்பத்துடன் நெருக்கமாக முடியுமா, கருப்பு பணத்தையெல்லாம், வெள்ளையாக மாற்றுவதற்கு திமுக இதை பயன்படுத்துகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு கூறினார்.