இன்னும் ஆரம்பிக்கவே இல்ல.. அதுக்குள்ளே அலறுற…மே 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்… தப்பிக்க இதோ சில டிபிஸ்..!

டப்பு ஆண்டில் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்து வருகிறது. மே மாதம் துவங்கி விட்ட நிலையில், வரும் 4ஆம் தேதி அக்னி நட்சத்திர வெயில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

கோடை வெப்பம் இந்த ஆண்டு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக கோடை காலம் மார்ச் மாத இறுதியில் தொடங்கும். பின்னர் படிப்படியாக அதிகரித்து மே மாதத்தில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகும். அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் மே மாதத்தில் தொடங்கும். ஆனால், நடப்பு ஆண்டு பிப்ரவரி இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. வெயிலின் உஷ்ணத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இன்னும் சொல்லப்போனால் ஏப்ரல் மாதத்தில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. ஈரோடு, சேலம், கரூர், தருமபுரி, மதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

ஈரோடு, கரூரில் 105 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. அக்னி நட்சத்திர வெயில் துவங்கும் முன்பே வெயிலின் தாக்கம் இவ்வளவு கொடூரமாக இருக்கிறது. மே மாதம் எப்படி இருக்குமோ என மக்கள் புலம்பாத குறைதான். தற்போது மே மாதமும் தொடங்கி விட்ட நிலையில், வரும் 4ஆம் தேதி அக்னி நட்சத்திர வெயில் தொடங்க உள்ளது. அக்னி நட்சத்திர வெயில் காலத்தில் கோடை வெயில் உச்சத்தை தொடும். இந்த வெயில் காலம் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கிறது. அக்னி நட்சத்திரம் என்பதை வானிலை ஆய்வு மையம் பயன்படுத்தாவிட்டாலும் மே மாதத்தின் இறுதியில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

எனவே, இந்த கால கட்டத்தில் வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருப்பதோடு அனல் காற்றுடன் அதிகபட்ச வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள், தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். ச்அதேபோல், அவசியம் இன்றி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம். வெயில் காலத்தில் வெளியே போனாலும் தலையில் தொப்பி போன்றவற்றை அணிந்து செல்வது நல்லது. அதுபோக இளநீர், தர்ப்பூசணி, சர்பத் போன்ற குளிர்ச்சியான உணவு பதார்த்தங்களையும் சாப்பிட்டு உடலின் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.