40 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுத்தை… மேலே ஏற முடியாமல் தவிப்பு- மீட்கும் முயற்சியில் வனத்துறை..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடுகின்றன. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் வனப்பகுதியை ஒட்டி அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு, காவல் நாய் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாக உள்ளது. இதற்கிடையே இன்று அதிகாலை பண்ணாரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை புதுக்குய்யனூர் பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே நடமாடியபோது அப்பகுதியில் இருந்த 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் கீழே விழுந்த சிறுத்தை மேலே ஏற முடியாமல் தவித்தது. சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்ட அப்பகுதி பொதுமக்கள் கிணற்றை எட்டிப் பார்த்தபோது கிணற்றில் சிறுத்தை படுத்துக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கிணற்றில் விழுந்து தவிக்கும் சிறுத்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வனத்துறை கால்நடை மருத்துவரை வரவழைத்து சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி மீட்க திட்டமிட்டுள்ளனர். சிறுத்தையை பார்ப்பதற்கு பொதுமக்கள் கூடியதால் வனத்துறையினர் பொதுமக்களை கிணற்றின் அருகே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.