கார் வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு-கோவையில் 200 பேரை போலீசார் தீவிர கண்காணிப்பு..!

கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் வெடித்து சிதறியது. இதில் காருக்குள் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்தார். அவருடைய வீட்டில் போலீசார் சோதனை செய்ததில் வெடி மருந்துகள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக அப்சர்கான், இஸ்மாயில், அசாருதீன், முகமது பாரூக் உள்பட 11 பேர் என்.ஐ.ஏ தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் உயிரிழந்த ஜனதா முபின் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம், பெங்களூரில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு நாங்கள் தான் காரணம் என்று ஐ.எஸ் பயங்கரவாதிகள் அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது. கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றதால் கோவை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை கண்காணிக்க போலீஸ் உயரதிகாரிகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி கூறும் போது:-

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக மற்றும் தொடர்புடையவர் குறித்து கண்காணிக்கப்பட்டது. அதில் 200 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த நபர்கள் செல்போன்கள், சமூக வலைதளங்களில் யார் யாரிடம் பேசி வருகிறார்கள் என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளதாக கூறியுள்ளது. அந்த அமைப்பின் இணையதள பக்கத்தை ஏற்கனவே அவர்கள் கண்காணித்து வருவதாகவும், 200 பேர் பதிவிறக்கம் செய்து உள்ளனரா ? அது தொடர்பாக யாரிடமும் பேசினார்களா ? என்பது குறித்து ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் ஐ.எஸ் வெளியிட்டு இருப்பது உண்மைதானா ? அல்லது அந்த அமைப்பின் பெயரில் வேறு யாராவது வெளியிட்டார்களா ? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் இது தொடர்பான கருத்துக்களை யாராவது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்களா ? என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்கள்.