இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 7.5% உயரும் – ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு..!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்புக்கு இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 7.5 சதவீதமாக உயரும் என்று தெரிவித்துள்ளார்.

உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவுகத் மிர்சியோயேவ்-ன் அழைப்பை ஏற்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவர்கள் குழுவின் 22-வது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சமர்கண்ட் சென்றடைந்தார். சமர்கண்ட் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை உஸ்பெகிஸ்தான் பிரதமர் அப்துல்லா அரிப்போவ் அன்புடன் வரவேற்றார். பல்வேறு அமைச்சர்கள், சமர்கண்ட் ஆளுநர், உஸ்பெகிஸ்தான் மூத்த அதிகாரிகளும் பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இந்நிலையில், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா தொற்று நோய் காலத்திற்குப் பிறகு, உலகம் பொருளாதார மீட்சிக்கான சவாலை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா காலம் மற்றும் உக்ரைன் போர், உலகளாவிய விநியோக சங்கிலியில் தடைகளை உருவாக்கியது. இதன் விளைவாக உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் நெருக்கடி ஏற்பட்டது.

ஷாங்காய் அமைப்பு எங்கள் பிராந்திய பகுதியில் நெகிழ்ச்சியான விநியோகச் சங்கிலியை உருவாக்க முயற்சிக்க வேண்டும். இதற்கு சிறந்த இணைப்பு மற்றும் போக்குவரத்து உரிமைகளை வழங்குவது முக்கியம். நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை இந்தியா ஆதரிக்கிறது. இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதில் நாங்கள் முன்னேற்றம் கண்டுள்ளோம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 7.5 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மக்களை மையப்படுத்திய வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு பாரம்பரிய மருந்துகளுக்கான மையத்தை குஜராத்தில் தொடங்கியது. பாரம்பரிய சிகிச்சைக்கான முதல் மற்றும் ஒரே உலகளாவிய மையம் இதுவாகும்.

ஒவ்வொரு துறையிலும் புதுமைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இன்று இந்தியாவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் ஆஃப்கள் உள்ளன. அவற்றின் 100-க்கும் மேற்பட்ட யூனிகார்ன்கள் உள்ளன. எங்கள் அனுபவம் பல நாடுகளின் உறுப்பினர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். 2023-ஆம் ஆண்டு ஐ.நா.வின் சர்வதேச திணை ஆண்டாக கொண்டாடப்படும். இதையொட்டி திணை உணவு திருவிழா நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இந்தியா இன்று உலகிலேயே மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவிற்கு மிகவும் மலிவு விலையில் செல்லும் இடங்களில் ஒன்றாகும் என்றார்’ பிரதமர் நரேந்திர மோடி.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி துருக்கி அதிபர் எர்டோகன் நேட்டாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டு இருக்கக்கூடிய செய்தியில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டின் இடையே துருக்கி ஜனாதிபதியை சந்தித்து பல்வேறு துறைகளில் இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விரிவாக விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் புதினையும் சந்தித்து பேச உள்ளார். முன்னதாக உலக தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்-