மேலும் 1,000 விமானங்களை வாங்கும் இந்தியா!

ஏற்கெனவே 1,200-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மொத்தத் தேவை 2,000-க்கும் அதிகமாக இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விமான நிறுவனங்கள் விமானங்களுக்குக் கடும் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றன. இதனைச் சமாளிக்க மேலும் 1,000 பயணிகள் விமானங்களை வாங்க இந்தியா தயாராக இருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.எகிப்து நாட்டுக்குச் சென்றுள்ள அவர், கெய்ரோவில் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய பியூஷ் கோயல், இந்திய விமான நிறுவனங்கள் ஏற்கெனவே 1,200-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவின் மொத்த விமானத் தேவை 2,000-க்கும் அதிகமாக இருப்பதாகவும், தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மேலும் 1,000 விமானங்களை வாங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விமானங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தாமதம் நிலவி வருவதால், ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்ட விமானங்களை விரைவாக வழங்குமாறு ஏர்பஸ், போயிங் உள்ளிட்ட முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனங்களிடம் வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்திய விமான நிறுவனங்களான இண்டிகோ, ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது விமானக் கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களிடம் அதிக எண்ணிக்கையில் விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளன.

ஆனால், உலகளாவிய விமானத் தயாரிப்பு நிறுவனங்களிடம் ஏற்கெனவே அதிகப்படியான ஆர்டர்கள் நிலுவையில் உள்ளன. மேலும், உதிரிபாகங்கள் மற்றும் விமான இன்ஜின்கள் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் புதிய விமானங்களைத் தயாரித்து வழங்குவதிலும் சிக்கல்கள் நீடிக்கின்றன.இதனால், இந்திய விமான நிறுவனங்கள் புதிய விமானங்களைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு, பயணிகளின் அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப சேவைகளை விரிவுபடுத்துவதில் சவால்களைச் சந்தித்து வருகின்றன.

இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையிலான விமானப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.

கூடுதல் விமானங்கள் கிடைக்கும்போது, இந்தியாவிலிருந்து எகிப்துக்குச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். தற்போது எகிப்து நாட்டின் எகிப்து ஏர் நிறுவனம் இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையே நேரடி விமான சேவைகளை இயக்கி வருகிறது.

இந்தியாவில் விமானப் பயணத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் விமானங்களை வாங்குவதற்கான திட்டமும், ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்ட விமானங்களை விரைவாகப் பெறுவதற்கான முயற்சிகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.