வாய்க்காலில் தள்ளி கோவை பெண் படுகொலை-கள்ளக்காதலன் கைது!

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் கீதா ( வயது 40) திருமணம் ஆன இவருக்கு கோவையை சேர்ந்த மெக்கானிக் கதிரவன் ( வயது 38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கதிரவன் தன்னை தாக்குவதாக கீதா போலீசில் புகார் செய்வதும், போலீசார் விசாரிப்பதும், வாடிக்கையாக இருந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு தொடர்பாக கீதா அளித்த புகாரின் பேரில் கதிரவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து கீதா ,கதிரவனை ஜாமினில் வெளியே எடுத்தார். இதற்கிடையே கீதாவின் நகையை வாங்கி கதிரவன் விற்றதாக கூறப்படுகிறது. மேலும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்தது .இதனால் கதிரவனிடம் நகை பணத்தை கேட்டு கீதா அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். இந்த நிலையில் நகை பணத்தை திருப்பித் தருவதாகவும் திருப்பூர் பகுதிக்கு வருமாறு கீதாவிடம் கதிரவன் தெரிவித்துள்ளார். அங்கு சென்ற கீதாவுக்கும் கதிரவனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கதிரவன் கள்ளக்காதலி கீதாவை கொலை செய்ய முடிவு செய்து திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே உள்ள பி.ஏ.பி, வாய்க்கால் பகுதிக்கு நைசாக அழைத்துச் சென்றார், அங்கு வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக சென்றுள்ளது. அப்போது கதிரவன் திடீரென்று கீதாவை பிடித்து வாய்க்காலில் தள்ளி விட்டார். அதன் பிறகு வாய்க்காலில் கீதா தவறி விழுந்து விட்டதாக 108 ஆம்புலன்ஸ்க்கு கதிரவன் தகவல் கொடுத்தார். அதன் பேரில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து கீதாவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வழியிலேயே கீதா இறந்து விட்டார். போலீஸ் விசாரணையில் கீதாவை வாய்க்காலில் தள்ளி கொலை செய்து விட்டு கள்ளக்காதலன் கதிரவன் நாடகமாடியது தெரிய வந்தது .இதையறிந்த திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர் .கீதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து குடிமங்கலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலன் கதிரவனை அதிரடியாக கைது செய்தனர். கோவை ரத்தினபுரியை சேர்ந்த பெண்ணை வாய்க்காலில் தள்ளி கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.