கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு… வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்தை தடுக்க தீவிர கண்காணிப்பில் மாநகராட்சி..!

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் 1000 டன் குப்பைகள், வாகனங்கள் மூலமாக வெள்ளலூர் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மறுசுழற்சி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் வெயில் காலங்களில், இந்தக் கிடங்கில் மீத்தேன் வாயு வெளியேறி தீ விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதனால், அப்பகுதியில் ஏற்படும் புகை மண்டலத்தால், அங்குள்ள குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதைக் கருத்தில் கொண்டு, வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:
குப்பைக் கிடங்கில் ஏற்படும் தீ, மளமளவென பரவுவதால் பெரிய விபத்தாக மாறி விடுகிறது. எனவே, சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டவுடன் அதை உடனடியாகத் தடுப்பதற்காக வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில், 5 லட்சம் லீட்டர் கொள்ளளவு கொண்ட நீா்தேக்கி வைக்கப்பட்டுள்ளது. வெயில் காலம் முடியும் வரை, 24 மணி நேரமும் குப்பைக் கிடங்கில் தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, குப்பைகளில் மீத்தேன் வாயு உருவாகி, தீவிபத்து ஏற்படாமல் தடுக்க மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளைப் பிரிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெயில் காலம் முடியும் வரை குப்பைக் கிடங்கை தீவிரமாகக் கண்காணிக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்