ஊட்டியில் விதிமுறைகளை மீறி இயக்கிய 6 தனியார் பஸ்கள் பறிமுதல்-அபராதம் விதிப்பு..!

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து 15 கிலோமீட்டர் தூரம் உள்ள அரக்காடு
பகுதிக்கு ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து தனியார் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்சில் அரக்காடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த
ஏராளமானோர் தினமும் சென்று பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊட்டியில் இருந்து அரக்காடுக்கு செல்லும் பஸ்கள் விதிமுறைகளை மீறி எல்லநல்லியில் இருந்து திரும்பி விடுவதாகவும் , அரக்காடு பகுதிக்கு வருவது இல்லை என்றும், இதனால் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அவதிப்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இதேபோல் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பாதிப்படைந்தனர். இதுகுறித்து சரியான நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து
அதிகாரி தியாகராஜன் விசாரணை நடத்தினார். இதில் தனியார் பஸ்கள் விதிகளை
மீறி பாதியில் திரும்பி வருவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 6 தனியார்
பஸ்களை அதிரடியாக பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். மேலும் பஸ்களுக்கு தலா
ரூ. ஆயிரம் வீதம் ரூ.6000 அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து துறையினர் பஸ்களை பறிமுதல் செய்து ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி உள்ளனர். எல்லநல்லியில் இருந்து அரக்காடு செல்லும் சாலை மிகவும் மோசமாக இருப்பதால் தான் பஸ்கள் செல்லவில்லை என்று பஸ் உரிமையாளர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, வட்டாரப் போக்குவரத்து அதிகாரி தியாகராஜன் அரக்காடு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.