கோவையில் நள்ளிரவில் விமானப்படை அதிகாரி குடிபோதையில் ரகளை… ஏடிஎம் மைய கேமராவை உடைத்தார்..! 

கோவையில் நள்ளிரவில் விமானப்படை அதிகாரி குடிபோதையில் ரகளை… ஏடிஎம் மைய கேமராவை உடைத்தார்..!  கோவை ரெட் பீல்டில் விமானப்படை நிர்வாகவியல் பயிற்சி கல்லூரி உள்ளது .இந்தகல்லூரியில் பல்வேறு மாநிலங்களில் உள்ள விமானப்படை நிர்வாக அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது .இங்கு சண்டிகாரை சேர்ந்த அதிகாரி பூபிந்தர் சிங் பயிற்சிக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அவர் நள்ளிரவு நிர்வாகவியல் பயிற்சி கல்லூரியிலிருந்து பாரதியார் ரோட்டுக்கு குடிபோதையில் நடந்து சென்றுள்ளார். அங்கிருந்த பெட்டி கடைக்கு சென்று 500 ரூபாய் கொடுத்து சிகரெட் கேட்டார். சில்லறை இல்லை என்று பெட்டிக்கடைக்காரர் 500 ரூபாயை திருப்பிக் கொடுத்ததும் அவரிடம் தகராறு செய்தார். பின்னர் அங்குள்ள தனியார் ஏடிஎம் மையத்திற்கு நள்ளிரவு 1 மணிக்கு சென்ற பூபிந்தர் சிங் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை அடித்து உடைத்தார் .மேலும் அந்த பகுதியில் நடுரோட்டில் நின்றபடி கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி தன்னை ரெட் பீல்டில் உள்ள விமானப்படை நிர்வாக பயிற்சி கல்லூரியில் கொண்டு போய் விடுமாறும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பார்த்த சிலர் இரவு ரோந்து போலீசாரிடம் புகார் செய்தனர் .இதனை தொடர்ந்து விமானப்படை நிர்வாக கல்லூரி அதிகாரிகள் காரில் வந்து அவரை மீட்டு சென்றனர் காட்டூர் போலீசார் நடந்த சம்பவம் குறித்து பூபிந்தர் சிங் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். இதை தொடர்ந்து நேற்று காலை இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் முன்னிலையில் விமானப்படை அதிகாரி பூபிந்தர் சிங் ஆஜராகி நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். உடைந்த கண்காணிப்பு கேமரா செலவு தொகையை ஏற்று கொள்வதாகவும் கூறினார் வங்கி அதிகாரிகளும் அந்த அதிகாரிக்கு எதிராக புகார் கொடுக்க விரும்பவில்லை. இதை தொடர்ந்து பிரச்சினை சுமூகமாக முடிந்தது இருந்தாலும் மேலதிகாரியின் விசாரணைக்காக நாளை( திங்கட்கிழமை) ஆஜராகுமாறு விமானப்படை அதிகாரி பூபிந்தர் சிங்கிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது .அவர் மீது வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை.