கோவை சரகத்தில் கடந்த 7 மாதத்தில் மட்டுமே நடந்த சாலை விபத்தில் 1,125 பேர் பலி- போக்குவரத்து இணை கமிஷனர் செந்தில்நாதன் தகவல்..!

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தை உள்ளடக்கிய கோவை சரக போக்குவரத்து
அலுவலகத்தின் கீழ் விதிமுறை மீறும் வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்
பட்டு வருகிறது.

மாவட்ட, மாநில எல்லைகளில் ஆர்.டி.ஓ. சோதனை சாவடிகளில் சோதனை நடக்கிறது.
வட்டார போக்குவரத்து கழக அதிகாரிகள் திடீர் தணிக்கை ஆய்வு நடத்தி
வாகனங்களை கண்காணிக்கின்றனர். நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூலை மாத இறுதி வரை கோவை சரகத்தில் அதிக நபர்களை வாகனங்களில் ஏற்றியதாக 991 வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 93 சரக்கு வாகனம், 479 மேக்சிகேப், 46 பள்ளி வாகனங்கள், 146 ஆட்டோக்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதிக பாரம் ஏற்றியதாக 1509 சரக்கு வாகனங்கள், 2 மினி பஸ், 5 இதர
வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டது. அனுமதி சீட்டு இல்லாமல்
இயங்கிய 410 வாகனங்கள், தகுதி சான்று இன்றி இயங்கிய 1056 வாகனங்கள்,
காப்பு சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 2309 வாகனங்கள், ஓட்டுநர் உரிமம்
இன்றி இயங்கிய 2977 வாகனங்கள், சீட் பெல்ட் இன்றி வாகனங் கள் இயக்கியதாக
934 பேர், ஹெல்மெட் போடாமல் வாகனங்கள் ஓட்டியதாக 943 பேர் மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டது. போக்குவரத்து விதிமீறல், உரிய சான்று இன்றி, வரி செலுத்தாமல் இயங் கியதாக பல்வேறு இனங்களில் சுமார் 10 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை சரகத்தில் உள்ள 3 மாவட்டத்தில் 5,156 விபத்துகள் நடந்தது. இதில்
1094 விபத்துகளில் காயமடைந்த 1125 பேர் இறந்து விட்டனர். விபத்து உயிரிழப்புக்கு காரணமான 407 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்ய
போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் உத்தரவிட்டனர். விபத்து ஏற்படுத்தும்
வகையில் இயங்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தீவிரமாக
நடக்கிறது.

இது குறித்து கோவை சரக போக்குவரத்து இணை கமிஷனர் (கூடுதல் பொறுப்பு)
செந்தில்நாதன் கூறியதாவது:-
வெளியூர், வெளி மாநில வாகனங்கள் அதிகளவு வந்து செல்கிறது. விபத்து
மற்றும் பல்வேறு விதிமுறை மீறல்களில் தொடர்புடைய பிற பகுதி வாகனங்கள்
மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த பகுதி வட்டார போக்குவரத்து
அலுவலகங்களுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது. விபத்தினால் உயிரிழப்பை தடுக்க தேவையான நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது.

அதிக விபத்துகள் இரு சக்கர வாகனங்களால் ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள்
காரணமாக விபத்து ஏற்படுவது அரிதாகவே இருக்கிறது. மோட்டார் வாகன
ஆய்வாளர்கள் வாகனங்களை ஆய்வு செய்யும் போது எந்திர குறைபாடு காரணமாக
விபத்து நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தது தெரிய வந்தது.
வாகனம் ஓட்டும் நபர்களின் அஜாக்கிரதை, அதி வேகம், கட்டுபாடு இல்லாத
தன்மையால் விபத்துகள் அதிகமாக நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்சூரன்சு இன்றி வாகனங்களை இயக்க கூடாது.

அனைத்து வாகனங்களிலும் இன்சூரன்சு கட்டாயம் இருக்கவேண்டும். போக்குவரத்து
அலுவலகத்திற்கு முறையான கட்டணங்களை செலுத்த வேண்டும். ஓட்டுநர் உரிமம்
பெற்று வாகனங்களை முறையாக இயக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை
கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். உரிமம் பெறுதல், கட்டணம் செலுத்துதல், அனுமதி பெறுதல் போன்றவை ஆன்லைன்
மூலமாக எளிதாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல் வாகனங்களை போலீசார் கண்காணிப்பு காமிரா மூலமாக கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர். பல்வேறு பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் மூலமாக விபத்திற்கு காரணமாக நபர்களின் லைசென்சு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.