கோவையில் 2 நாட்களில் 5 பெண்களிடம் தொடர் நகை பறிப்பு – திருட்டு கும்பலைப் பிடிக்க 7 தனிப்படை..!

கோவையில் கடந்த 2 நாட்களில் வெவ்வேறு இடங்களில் ரோட்டில் நடந்து சென்ற பெண்களிடம் பைக்கில் வந்து வழிப்பறி கொள்ளை சம்பவம் சங்கிலி தொடர் போல நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பீதி அடைந்து உள்ளனர். இந்த நிலையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 7 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனி படை போலீசார் நகை பறிப்பு சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராகளில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் 4 பேர் தொடர்ந்து நகைப் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டு வருவதும் முகத்தை ஹெல்மெட் மற்றும் முக கவசத்தால் மறைத்து அந்தந்த பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களை திருடி நகை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிள்களை சாலை ஓரம் அனாதையாக நிறுத்தி விட்டு செல்வதும் தெரிய வந்தது..எனவே நகை பறிப்பு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். மாநகரம் முழுவதும் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் 3 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு பகல் என்று தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது .குறிப்பாக பஸ் நிலையம் மார்க்கெட் உட்பட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாநகரத்து வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி தீவிர சோதனை நடந்து வருகிறது. ஹெல்மெட் மற்றும் முக கவசம் அணிந்திருப்பவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்..