பசுவின் கோமியத்தை(சிறுநீர்) லிட்டர் ரூ.4க்கு வாங்கும் திட்டத்தை முதல்வர் பூபேஷ் பாகல் தொடங்கிவைத்தார்.
தனது வீட்டிலிருக்கும் பசுக்களின் சிறுநீரை 5 லிட்டர் விற்பனை செய்து ரூ.20 பெற்றுக்கொண்ட முதல்வர் பூபேஷ் பாகல், அந்தப் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று ஹரேலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கோதன் நியாய் திட்டத்தின் கீழ் பசு கோமியம் வாங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
ஏற்கெனவே சத்தீஸ்கர் அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கோதன் நியாய் யோஜனா எனும் திட்டத்தை கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் பசுவின் சாணத்தைக் கிலோ 2 ரூபாய்க்கு கொள்முதல் செய்து கால் நடை வளர்ப்போருக்கு வருமானம் அளித்தது. இந்த சாணத்தை இயற்கை உரமாக மாற்றி, கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சிக்கு திட்டமிடப்பட்டது.
பசுவின் சாணத்தை கிலோ ரூ2க்கும், கோமியத்தை ரூ.4க்கும் வாங்கும் முதல் அரசு சத்தீஸ்கர்தான். பசுவின் கோமியத்தை பூச்சி கொல்லி மருந்தாக மாற்றுவதற்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
முதல்வரின் இல்லத்தில் நடந்த விழாவில், முதல்வர் பூபேஷ் பாகல், வேளாண்எந்திரங்களுக்கு பூஜை செய்து வழிபட்டார். அதன்பின் பசுவை வணங்கி, அதன் சிறுநீரை விற்பனை செய்தார். இந்த விழாவின்போது, இயற்கை உரம் தயாரித்த 7442 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.17 கோடி ஊக்கத்தொகை வழங்கினார்.
முதல்வர் பூபேஷ் பாகல் கூறுகையில் ” நாங்கள் தொடங்கிய கோதன் நியாய் திட்டத்தின் கீழ் பணக்காரர் முதல் ஏழைகள் வரை யார் வேண்டுமானாலும் பசுவின் சாணத்தை கிலோ ரூ.2க்கு விற்கலாம், சிறுநீரை லிட்டர் ரூ.4க்கு விற்கலாம்.
கடந்த இரு ஆண்டுகளாக பசு சாணம் விற்பனையாளருக்கு ரூ.300 கோடி வழங்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் செழிப்பாக இருக்க வேண்டும், விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கவே இயற்கை முறை விவசாயத்தை ஊக்குவிக்கிறோம்
பசுவின் சிறுநீர் சிறந்த பூச்சி கொல்லியாக இருக்கும். இதன் மூலம் புதிதாக பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும், சுய உதவிக்குழுவினருக்கும் வருமானம் கிடைக்கும். இயற்கை உரம் பயன்படுத்தப்படும்போது, வேளாண் செலவு குறையும்” எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே சத்தீஸ்கர் அரசு பசுவின் சாணத்தை கிலோ ரூ.2க்கு கொள்முதல் செய்துவருகிறது. கொள்முதல் செய்யப்படும் சாணம் உலரவைக்கப்பட்டு, இயற்கை உரமாக மாற்றப்பட்டு விற்கப்படுகிறது. அந்த வகையில் 2 ஆண்டுகளில் ரூ.150 கோடிக்கு சாணம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 20 லட்சம் குவிண்டால் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.143 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
Leave a Reply