கோவை:
மதுக்கரை வட்டம் ஒத்தகால்மண்டபம் வருவாய் ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் அதிகாரிகள் மதுக்கரை நாச்சிப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 3 யூனிட் மணல் அனுமதி இல்லாமல் எடுத்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து லாரியை ஓட்டி வந்த திண்டுக்கலை சேர்ந்த அஜித்குமார் (24) என்பவரை பிடித்து, மணல் லாரியையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து வருவாய் ஆய்வாளர் ஆனந்தராஜ் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோன்று கோவை மாவட்ட சிறப்பு வருவாய் ஆய்வாளர் பாலசுந்தரம் மற்றும் அதிகாரிகள் வாளையார் சோதனை சாவடி அருகே ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கேரளா லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 7 யூனிட் கற்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு வருவாய் ஆய்வாளர் லாரியை பறிமுதல் செய்து லாரி டிரைவரை பிடித்து கே.ஜி.சாவடி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சோனு (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Leave a Reply